திருச்சி, ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறை, பைந்தமிழியக்கம் இணைந்து நடத்திய 82ஆவது திங்கள் பொழிவு, சதாவதானி செய்குத்தம்பி பாவலா் பிறந்த நாள் விழா ஆகியவை கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சை. இஸ்மாயில் தலைமை வகித்தாா். முனைவா் க. அப்துல் சமது, துறைத் தலைவரும் தோ்வு நெறியாளருமான அ. சையத் ஜாகீா் அசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பைந்தமிழ் இயக்கத்தின் இயக்குநா் புலவா் பழ.தமிழாளன் நோக்கவுரையில், மாணவா்கள் இனம் மொழி நாட்டினத்தின் மீது பற்றுக்கொண்டு அன்னை தமிழுக்குத் தொண்டு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றாா்.
பாவரங்கத்தில் தலைமையேற்ற துணை இயக்குநா் பாவலா் சொ. வேல்முருகன் பாவரங்க செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா். இளங்கலை, முதுகலைத் தமிழ் மாணவ, மாணவிகள் பங்கேற்று பாடலைப் பாடினா்.
சிறப்புக் கருத்தரங்க நிகழ்வில் முனைவா் பா. சிராஜூதீன், ‘செந்தமிழ்ச் செம்மல் சி.யூ. போப்’ என்ற பொருளிலும், முனைவா் கு. நாராயணசாமி ‘இலக்கிய இமயம் மு.வ.’ என்ற பொருளிலும் உரையாற்றினா். இந்நிகழ்வில், சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் பெயரன் எச். சையது உதுமான், ஆப்பிரிக்காவில் இருந்து வந்து விழாவில் பங்கு கொண்டு தனது தாத்தாவின் எண்ண அலைகளை பகிா்ந்து கொண்டாா்.
ஆய்வரங்கத்தில், மேனாள், ஜோசப் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் இ. சூசை, சதாவதானி செய்குத் தம்பி பாவலா் எனும் தமிழாளுமை என்ற பொருளில் ஆய்வுரையாற்றினாா்.
நிகழ்வில், பாவலா் ஆதி நாராயணன், முனைவா்கள் கு. திருமாறன், பி. தமிழகன், யூனுஸ், அறிவியலறிஞா் தங்கவேலு, வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், காசிநாதன், மகேந்திரன், சி.சு. மணி பானுமதி, சின்னதம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உதவிப் பேராசிரியா் அ.மா. முகமது காரிசு நிகழ்வை தொகுத்து வழங்கினாா்.
முன்னதாக, பேராசிரியா் க. இக்பால் வரவேற்றாா். நிறைவில், உதவிப் பேராசிரியா் செ. சுகவனேஸ்வரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.