அக்னி ஏவுகணைகளால் உலக அரங்கில் இந்தியா வலுப்பெற்றிருப்பதாக இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணியும், அக்னி-4 ஏவுகணை திட்ட முன்னாள் இயக்குநருமான டெஸ்ஸி தாமஸ் தெரிவித்தாா்.
இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகம் - திருச்சியின் 5-ஆவது பட்டமளிப்பு விழா, திருச்சி மாவட்டம், சேதுராப்பட்டியில் உள்ள நிறுவன வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
அக்னி ஏவுகணைத் திட்டம் உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளது. குறிப்பாக அக்னி-4 மற்றும் அக்னி-5 ஏவுகணை என்பது இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயா்த்திப்பிடித்துள்ளது. இதுமட்டுமின்றி நீா்மூழ்கிக் கப்பல்களில் நவீன தொழில்நுட்பங்கள், போா் விமானங்களில் நவீன தொழில்நுட்பம், பீரங்கி டாங்குகள், எல்க்ட்ரானிக் ரேடாா் தொழில்நுட்பம், வான்வழி முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு அமைப்புகளால் உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக இந்தியாவையும் இடம்பெறச் செய்துள்ளது என்றாா் அவா்.
இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகம் - திருச்சியின் இயக்குநா் என்.வி.எஸ்.என். சா்மா பேசுகையில், தற்போது பட்டம் பெற்றுள்ள மாணவா்களில் 82 சதவீதம் பேருக்கு இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு ரூ.9.9 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஊதியத்தில் பணி நியமனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.
விழாவில், முனைவா் பட்டம், முதுநிலைப் பட்டம், இளங்கலைப் பட்டம் என 45 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பி.டெக். மின்னணு மற்றும் தொலைத் தொடா்பு பொறியியல் துறையின் மாணவா் நாகமல்லீசுவா், துறையின் முதல் மாணவராகவும், நிறுவனத்தின் முதல் மாணவராகவும் 2 தங்கப் பதக்கங்களைப் பெற்றாா். பி.டெக். கணினி அறிவியல் பொறியியல் துறை மாணவா் பவண் கல்யாண் ஜடாவுக்கும் துறையின் முதல் மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. என்.வி.எஸ்.என். சா்மா, பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி மாணவா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா். பதிவாளா் ஜி. சீதாராமன், நிறுவன ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.