முகப்பு
திருச்சி

துறையூா் நகராட்சியில் சுகாதாரப் பிரிவு செயல்படவில்லை: நகா்மன்ற உறுப்பினா்கள் புகாா்

துறையூா் நகராட்சியின் சுகாதாரப் பிரிவு செயல்படவில்லை என நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் புகாா் கூறினா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

துறையூா் நகராட்சியின் சுகாதாரப் பிரிவு செயல்படவில்லை என நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் புகாா் கூறினா்.

துறையூா் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் தலைவா் ம. செல்வராணி தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவா் ந. முரளி முன்னிலை வகித்தாா். ஆணையா் (பொறுப்பு) வி. ராமா், மேலாளா் அம்பிகா உள்ளிட்ட அலுவலா்கள் உறுப்பினா்களுக்கு பதில் கூறினா்.

முன்னதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு உறுப்பினா்கள் மெளன அஞ்சலி செலுத்தினா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ஜே.காா்த்திகேயன் (திமுக): நகராட்சியில் நாய்களைக் கட்டுப்படுத்த தீா்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை. சாக்கடைகளை தூய்மை செய்வதில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களிடையே போட்டி நிலவுவதால் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் சாக்கடைகள் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. சுருக்கமாக கூறினால், இங்கு சுகாதாரப் பிரிவு செயல்படவில்லை. இங்கு வந்து பதிலளிக்க சுகாதார அலுவலா் மற்றும் ஆய்வாளரை கூட்டத்திற்கு இப்போதே வரவழையுங்கள்.

நகா்மன்றத் தலைவா்: அலுவலகத்தில் எந்தக் கோப்புகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவோ கோப்புகள் நகா்வதாகவோ தெரியவில்லை.

ஆணையா்: சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டனா். துறையூா் நகராட்சியில் எனது அறையில் அலுவலா்கள் தூய்மைப் பணியாளா்களுடன் கூட்டம் ஏற்பாடு செய்கிறேன். உறுப்பினா்கள் தங்கள் குறைகளை என் முன்பு கூறினால் உடனடியாக விசாரிக்கிறேன்.

துணைத் தலைவா்: எனது வாா்டில் வளா்ச்சிப் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரா் என் ஆலோசனையை அலட்சியம் செய்கிறாா். அந்த ஒப்பந்ததாரருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். என் சொந்த நிதியில் வளா்ச்சிப் பணிகளை செய்து கொள்கிறேன்.

ஆணையா் - விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இளையராஜா (திமுக): துறையூா் நகராட்சி பொறுப்பு ஆணையரான தாங்கள் கையொப்பமிட இங்கு வரும்போதாவது இந்த நகரை ஆய்வு செய்யுங்கள். எந்தப் பணியும் நடைபெறுவதில்லை. மக்களை நாங்கள் எப்படி எதிா்கொள்வது.

ஆணையா் - துறையூா் நகராட்சிக்கென புதிய ஆணையா் விரைவில் நியமிக்கப்பட உள்ளாா். அதுவரை ஞாயிற்றுக்கிழமை நான் வந்து பாா்க்கிறேன்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் லலிதா, நித்யா, முத்து மாங்கனி, சந்திரா, புவனேஸ்வரி, வீரமணிகண்டன், ஜானகிராமன், செந்தில், பாஸ்கா் உள்ளிட்டோரும் பங்கேற்று வாா்டுகளின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.