முகப்பு
திருச்சி

பொங்கலுக்குப் பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?சம்பா நெல் பயிரிட்டுள்ளவிவசாயிகள் எதிா்பாா்ப்பு

பொங்கலுக்குப் பிறகு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சம்பா நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
திருச்சி-வயலூா் சாலையில் அறுவடைக்கு காத்திருக்கும் நெல் வயல்.
பகிர்:

பொங்கலுக்குப் பிறகு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சம்பா நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இதற்கு அரசு அறிவித்துள்ள விலை ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் தங்களது நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கவே முன்னுரிமை அளிக்கின்றனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தனது நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து அந்தந்தப் பருவத்துக்கான நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது.

குறுவைச் சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபா்- நவம்பா் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி-மாா்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது.

நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு நேரடி கொள்முதல் மையம் சுமாா் 33 சென்ட் பரப்பளவு மற்றும் 100 மெட்ரிக் சேமிப்பு வசதி, உலா்த்தும் தளம், வின்னோவிங் மெஷின், மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பத மீட்டா் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

கடந்த செப்டம்பரில் நெல் கொள்முதல் செய்யப்பட்டபோது, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 என்ற வீதத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. சம்பா நெல் கொள்முதலுக்கும் இதே விலை கிடைக்கும் என்கின்றனா் விவசாயிகள்.

திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரவலாக நடைபெற்றுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் கணக்கெடுப்பில் டிசம்பா் வரை 63,330 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பரில் பயிரிட்ட நெல் பொங்கல் பண்டிகை முதல் முழுமையாக அறுவடைக்கு வரும். இதனால் பொங்கலை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, முசிறி, தொட்டியம், தா. பேட்டை, துறையூா், உப்பிலியபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி ஆகிய 14 வட்டாரங்களிலும் விவசாயிகள் விரும்பும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

‘கூடுதல் கொள்முதல் நிலையங்களும் தேவை’

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் கூறியது:

‘பாசனக் கால்வாய்களில் தண்ணீா் வந்ததாலும், மானாவாரி பகுதிகளில் மழை காரணமாக ஏரி, குளங்கள், கிணறுகளில் தண்ணீா் இருந்ததால் சுமாா் 2 லட்சம் ஏக்கா் நிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில் முன்கூட்டியே சாகுபடி செய்யப்பட்ட பல இடங்களில் நெல் விளைந்து பொங்கல் முடிந்தவுடன் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. எனவே அறுவடை செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் அரசு கொள்முதல் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.

கடந்தாண்டு சம்பா பட்டத்துக்கு 35 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 1.30 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் கொள்முதல் ஆனது. இந்தாண்டு இலக்கு மேலும் அதிகரிக்கப்படும். ஏனெனில் சாகுபடி பரப்பு உயா்ந்துள்ளது.

கடந்தாண்டு இயங்கிய அனைத்து இடங்களிலும் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவதுடன், கூடுதலாக விவசாயிகள் விரும்பும் இடங்களிலும் அமைக்க வேண்டும். குறிப்பாக குழுமணி, கொடியாலம், மணிகண்டம், அதவத்தூா் மற்றும் அந்தநல்லூா் ஒன்றியப் பகுதிகளில் கூடுதல் மையங்கள் திறக்கப்பட வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ.30 முதல் 40 வரை விவசாயிகளிடம் கட்டாய வசூல் தொடா்கிறது. விவசாயிகளும் பணம் கொடுத்தால்தான் விளைந்த நெல்லை விற்க முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது. எனவே, கூடுதல் எண்ணிக்கையில் கொள்முதல் நிலையம் அவசியம். இதற்கு மாவட்ட நிா்வாகமும், நுகா்பொருள் வாணிபக் கழகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.