100-க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாஜக கவுன்சிலர் மகன்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கோவாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பாஜக கவுன்சிலரின் மகன் பற்றி...
பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ள பாஜக கவுன்சிலரின் மகன் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் உள்ள குர்ச்சோரம் முனிசிபல் பகுதிக்கு உள்பட்ட மதேகால் ககோடா பகுதியின் கவுன்சிலராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த சுஷாந்த் நாயக். இவரது மகன் சோஹம் நாயக் (20) கடந்த மார்ச் 21 அன்று பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
18 வயதுக்குள்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதனை விடியோ எடுத்துப் பரப்பிய குற்றச்சாட்டில் சோஹம் மீது போக்ஸோ சட்டம், கோவா குழந்தைகள் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதுபற்றி கோவா மஹிளா காங்கிரஸ் கமிட்டி நடத்திய கூட்டத்தில் பேசிய கோவா காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர், “இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த 3 ஆண்டுகளாக இதனைச் செய்து வந்துள்ளார். குற்றவாளிக்கு இந்த வாரம் 21 வயதாகிறது. அப்படியென்றால் 17 வயது முதலே இந்தக் குற்றத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.இந்தப் பாலியல் புகார், இதுவரை வெளியான தகவல்களை விட மிகவும் மோசமானது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் குர்ச்சோரம், மார்கா, வாஸ்கோடகாமா, போந்தா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தீவிரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
இந்தப் புகார் எழுந்ததும் காவல்துறையினர் முதலில் வழக்குப்பதிய மறுத்தனர். உள்ளூர் மக்களின் கடும் அழுத்தத்திற்குப் பிறகே வழக்குப் பதியப்பட்டது.
கோவா மாநில மகளிர் ஆணையம், கோவா குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில கல்வித்துறை ஆகியவை இன்னும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்?
இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றப்பிரிவு அதிகாரியிடம் கேட்டபோது பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 பேர் மட்டுமே புகாரளித்ததாகக் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பலரைப் புகாரளிக்க ஊக்குவிக்கும் விதமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணை முடிந்த பின்னரே பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவரும்“என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில், குற்றவாளியின் தந்தை சுஷாந்த் நாயக் ஆளும் பாஜகவுடன் தொடர்புடையவர் அல்ல என்று பாஜக தலைவர் சித்தார்த் கன்ஸ் தேசாய் தெரிவித்துள்ளார். அதில், “செய்திகளில் சொல்லப்படுவது போன்று சுஷாந்த் நாயக் பாஜகவுடன் தொடர்புடையவர் அல்ல. அவர் கட்சியின் நிர்வாகி கூட இல்லை. அவர் சுயேட்சையாக நின்றவர். நகராட்சி மன்றத் தேர்தல்கள் கட்சிச் சின்னங்களின் அடிப்படையில் நடத்தப்படுவதில்லை” என்றார்.
மேலும், குற்றவாளி சோஹம் நாயக்கை கைது செய்ய தாம் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Goa sex scandal involving councillor's son has more than 100 victims: Says Congress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.