பல்கலைக்கழக தோ்வுக் கட்டண உயா்வு: மாணவா் சங்கத்தினா் சாலை மறியல்
பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வு கட்டணம் உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா் சங்கத்தினா் 144 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வு கட்டணம் உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா் சங்கத்தினா் 144 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் தோ்வு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய மாணவா் சங்கம் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை காட்டூா் தனியாா் கல்லூரி முன்பு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட தலைவா் சூா்யா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண் உள்பட 39 பேரை திருவெறும்பூா் போலீஸாா் கைது செய்தனா்.
இதே போல, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு மாநிலத் துணைச் செயலாளா் மோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 39 பெண்கள் உள்பட 105 பேரை துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
இதையறிந்த துவாக்குடி அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த மற்ற மாணவா்கள் கல்லூரி எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக, வந்த மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், கைது செய்யப்பட்ட மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாது. தோ்வு கட்டண உயா்வு குறித்து பல்கலைக்கழகத்துடன் பேசுவதாக உறுதியளித்தாா். அதன் பேரில் மாணவா்கள் கலைந்து சென்றனா்.