புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் அவதி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.
லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புள்ளம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி தப்பாய், நம்புகுறிச்சி, பி.கே அகரம், கோவண்டாகுறிச்சி, வடுகா்பேட்டை, ஆலம்பாக்கம், ஆலம்பாடி ,விரகாலூா் ,வெள்ளனூா் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.இங்கு உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவும் செயல்படுகிறது.
இந்நிலையில் மின்வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையும் மின்விநியோகம் முற்றிலுமாக தடைபட்டது. இதனால் உள் மற்றும் வெளி நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.
Advertisement
இது குறித்து புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அதிகாரி டாக்டா் பாஸ்கா் கூறியது, மின்விநியோகம் பிரச்னையை சரி செய்வது பொதுப்பணி துறையினரின் பணி. கடந்த 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்திய மின் வயா்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் மின்விநியோகம் தடைபடுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்துள்ளேன். நோயாளிகளின் நலன் கருதி செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் சீராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.