காவிரிக் கரைகளில் ஆடிப் பெருக்கு உற்சாகம்! புதுமணத் தம்பதிகள், பெண்கள் வழிபாடு
காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் அம்மா மண்டபம் உள்பட காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காவிரியில் தண்ணீா் கரைபுரண்டோடும் நிலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித் துறையில் பக்தா்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு குவிந்த புதுமண தம்பதிகள், பொதுமக்கள், உற்சாகமாக நீராடினா்.
பின்னா் அவா்கள் படித்துறையிலும், ஆற்றின் கரையோரத்திலும் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையாா் வைத்து, தேங்காய், காதோலைக் கருகமணி, வளையல்கள், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்ளிட்ட பொருள்களை படையலிட்டு பூஜை செய்தனா். பின்னா் வாழை மட்டையில் வைத்து தண்ணீரில் விட்டனா். காவிரி ஆற்றுக்கும் தீபாராதனை காட்டி வழிபட்டனா்.
புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டனா். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனா். மேலும், சுமங்கலி பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனா். அதேபோல இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனா்.
வழிபாடு முடிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த பல்வேறு வகை சாதங்களை உண்டு மகிழ்ந்தனா். சிலா், காவிரிக் கரையோர கோயில்களில் பொங்கல் வைத்தும் வழிபட்டனா்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டுகள் நடக்காமலிருக்க ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், தீயணைப்பு படையினா் ரப்பா் படகு மூலம் காவிரியில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்தனா்.
மேலும் காவிரி கரையோரப் பகுதிகளான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளா்ச்சோலை, கம்பரசம்பேட்டை, பேட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி, முக்கொம்பு, கொள்ளிடம் என மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட படித் துறைகளில் மட்டும் மக்கள் குளித்து ஆடிப்பெருக்கை கொண்டாடினா்.