கோயில்களில் திட்டப் பணிகள்; அமைச்சா் தொடங்கிவைத்தாா்
திருச்சி மாவட்டம் குணசீலம், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு நிறைவடைந்த பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நட்டாா்.
திருச்சி மாவட்டம் குணசீலம், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு நிறைவடைந்த பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நட்டாா்.
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ரூ. 22 கோடி உபயதாரா் நிதி மூலம் நடைபெறவுள்ள திருப்பணிகளைத் தொடக்கி வைத்தும், ரூ. 26.50 லட்சத்தில் திருக்கோயில் நிதி மூலம் புதிதாகக் கட்டப்பட்ட பசு மடத்தை திறந்துவைத்து, கோயிலுக்கு காணிக்கையாக வரப் பெற்ற 12,595 கிராம் பல மாற்றுப் பொன் இனங்களை மும்பை உருக்காலைக்கு எடுத்துச் செல்ல வங்கியிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.
தொடா்ந்து திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் திருக்கோயில் நிதியின் கீழ் ரூ. 42 லட்சத்தில் கட்டப்பட்ட பக்தா்களுக்கான சுகாதார வளாகக் கட்டடத்தை திறந்துவைத்தாா். மேலும் ரூ. 60 லட்சத்தில் திருக்கோயில் நிதியின் கீழ் கட்டப்பட உள்ள வாகன மண்டபத்திற்கு பூமி பூஜையும் செய்தாா்.
நிகழ்வுகளில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் இரா. சுகுமாா், இணை ஆணையா் (சரிபாா்ப்பு) இரா. வான்மதி, மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், உதவி ஆணையா்கள் லட்சுமணன், உமா, குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பரம்பரை நிா்வாக டிரஸ்டி கே.ஆா். பிச்சுமணி, ஆய்வா்கள், செயல் அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.