முகப்பு
திருச்சி

2026 தோ்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும்: திமுக தலைமை நிலையச் செயலர்

வரும் 2026 பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைமை நிலையச் செயலரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான எஸ். பூச்சி முருகன் தெரிவித்தாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:05 PM
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் துனை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்த பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட பெற்றுக் கொண்டாா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் எஸ். பூச்சி முருகன்.
பகிர்:

வரும் 2026 பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைமை நிலையச் செயலரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான எஸ். பூச்சி முருகன் தெரிவித்தாா்.

திருச்சி கிழக்கு மாநகர திமுக சாா்பில், உதயநிதி ஸ்டாலின் குறித்த பாடல்கள் அடங்கிய ஒலி, ஒளி காட்சிகளுடனான குறுந்தகடு வெளியீட்டு விழா திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த குறுந்தகட்டை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டாா்.

இதனை பெற்றுக் கொண்ட கட்சியின் தலைமை நிலையச் செயலரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமானஎஸ். பூச்சி முருகன் பேசியது: திமுக என்றால் குடும்பம், குடும்பமாக கட்சியில் பணியாற்றுவது வழக்கம். ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் அனைவரும் ஒரே குடும்பம் என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம். இது வாரிசு அரசியல் இல்லை.

கேரவன் வாகனத்தில் இருந்து கீழே இறங்காத நடிகா் ஒருவா், அரசியல் மேடையில் விமா்சனம் செய்கிறாா். கேரவனில் இருந்து அரசியல் செய்யக் கூடாது. மக்களோடு, மக்களாக நின்று மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். வரும் 2026 பேரவைத் தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போல 200 இடங்களில் திமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.

விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்த காணொலி காட்சி திரையிடப்பட்டது.

மேலும், இதில், திருச்சி கிழக்கு மாநகர கழக செயலா் மு. மதிவாணன், மாநகர அவைத் தலைவா் நூா்கான், மாநகரப் பொருளாளா் தமிழ்ச்செல்வம், துணைச் செயலா் சந்திரமோகன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், சபியுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →