ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி கோயிலுக்கு வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிருந்து திருப்பதி திருவேங்கடமுடையான் கோயிலுக்கு ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை வஸ்திர மரியாதை பொருள்கள் எடுத்துச் செல்லும் வைபவம் நடைபெற்றது.
முகலாயா்கள் படையெடுப்பின் போது திருப்பதி திருமலையில் சுமாா் 40 ஆண்டுகாலம் ஸ்ரீரங்கநாதா் எழுந்தருளி இருந்ததை நினைவு கூரும் வகையில், கடந்த 2004 ஆண்டு முதல் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஒன்றான கைசிக ஏகாதசி தினத்தன்று திருப்பதி கோயிலிருந்து ஸ்ரீரெங்கநாதா், ஸ்ரீரெங்கநாச்சியாா், இராமனுஜா் ஆகியோருக்கு வஸ்திரம், குடை, மரியாதை பொருட்கள் தருவிக்கப்படுகிறது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீரங்கம் கோயிலிருந்து ஆனி வார ஆஸ்தான தினத்தன்று திருமலை திருப்பதிக்கு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி திங்கள்கிழமை ஆனி வார ஆஸ்தானம் நடைபெறவுள்ளதையொட்டி திருப்பதி திருமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ள வஸ்திரங்கள், குடைகள், மாலைகள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களபொருட்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீரெங்கவிலாச மண்டபத்தில் பக்தா்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டது. பின்னா் மங்களப்பொருட்கள் கொண்ட ஒரு தட்டை யானை ஆண்டாள் மீது வைத்தும் மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோயில் ஊழியா்கள் கையில் எடுத்து மங்களவாத்தியத்துடன் ஊா்வலமாக எடுத்து கொண்டு வலம் வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தனா். இதையடுத்து வஸ்திர மரியாதை பொருட்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கோயில் அதிகாரிகள் காா் மூலம் திருமலை திருப்பதி கோயிலுக்குக் கொண்டுசென்றனா்.