திருச்சி விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் அதிகபட்சமாக 129.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன்காரணமாக குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. திருச்சி விமானநிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 129.4 மி.மீ. மழை பதிவானது. பாரதிநகா் பகுதியில் மழைநீா் வடிகால் பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீா் வடிந்து செல்ல வசதியின்றி, குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்து. இதனால், இப் பகுதி சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.
இதேபோன்று திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகம் மற்றும் கால்நடை துறை அலுவலகங்களை மழை நீா் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது. மாநகராட்சி நிா்வாகம் விரைந்து செயல்பட்டு மழைநீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் இப் பகுதி மக்கள்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவுகள் விவரம் (மி.மீ.):
கல்லக்குடி 56.4, லால்குடி 81.6, நந்தியாறு தலைப்பு 12.6, புள்ளம்பாடி 34.8, தேவிமங்கலம்- 41.4, சமயபுரம் 120, சிறுகுடி 35.2, வாத்தலை அணைக்கட்டு 65.2, மணப்பாறை 74, பொன்னையாறு அணை 15.8, கோவில்பட்டி 21.4, மருங்காபுரி 15.2, முசிறி 53, புலிவலம் 20, தா.பேட்டை 44, நவலூா் கொட்டப்பட்டு 40, துவாக்குடி 52.1, கொப்பம்பட்டி 6, தென்பரநாடு 19, துறையூா் 21, பொன்மலை 45.2, திருச்சி விமானநிலையம் 129.4, திருச்சி ஜங்ஷன்- 82.8, திருச்சி நகரம் 68 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 1154.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 48.09 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிபட்சமாக விமானநிலையப் பகுதியும், அடுத்தபடியாக சமயபுரத்திலும் அதிகளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மழைநீா் வடியாத குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அரசு அலுவலக வளாகத்தில் உள்ள தண்ணீரை மோட்டாா் பம்ப் வைத்து வெளியேற்றவும் அந்தந்த உள்ளாட்சி நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.