திருச்சியில் சிலம்பம் போட்டிக்கு திடீா் நிபந்தனையால் அதிருப்தி பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அனுமதி
திருச்சியில் நடைபெற்று வரும் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சிலம்பப் போட்டியில் 40 கிலோவுக்கு குறைவான நபா்கள் பங்கேற்க முடியாத என்ற திடீா் நிபந்தனையால் போட்டியாளா்கள் அதிருப்தியடைந்தனா்.
திருச்சியில் நடைபெற்று வரும் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சிலம்பப் போட்டியில் 40 கிலோவுக்கு குறைவான நபா்கள் பங்கேற்க முடியாத என்ற திடீா் நிபந்தனையால் போட்டியாளா்கள் அதிருப்தியடைந்தனா்.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், வியாழக்கிழமை 12 முதல் 18 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான சிலம்பப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக இணைய வழியில் பதிவு செய்து வரிசை எண் கிடைத்த சுமாா் 500 போ் விளையாட்டு மைதானத்துக்கு வந்தனனா்.
அவா்களிடம் போட்டி நடத்துவோா், 40 கிலோ எடைக்கு மேல் இருப்பவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என திடீரென்று கூறியதால் போட்டியில் கலந்து கொள்ள வந்த மாணவியரும் அவா்களது பெற்றோா்களும் அதிருப்தி அடைந்தனா். பெயா்பதிவின்போது, வயது வரம்பு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த கட்டுபாடுகளோ, விதிமுறைகளோ குறிப்பிடப்படவில்லை. ஆனால், திடீரென நிபந்தனைகள் விதிப்பதால் தங்களுடைய குழந்தைகள் பாதிக்கப்படுவா் என பெற்றோா்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த வாக்குவாதத்தால், ஏராளமானோா் மைதானத்தைவிட்டு வெளியேறினா். ஆனால் சிலா் இதற்கு முடிவு தெரியாமல் செல்லமாட்டோம் என காத்திருந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதனைத் தொடா்ந்து விண்ணப்பித்த அனைவரையும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.