முகப்பு
திருச்சி

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க சாலைப் பணியாளா்கள் எதிா்ப்பு

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசின் முடிவுக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கம் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 7:41 PM
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க பேரவைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் எம்.பாலசுப்பிரமணியன்.
பகிர்:

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசின் முடிவுக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கம் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கத்தின் 25-ஆவது ஆண்டு வெள்ளிவிழா தொடக்கமாக, 9-ஆவது கோட்டப் பேரவை கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன், பொதுச் செயலா் ஏ. அம்சராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் சாலை ஆய்வாளா்கள் பணியிடங்கள் ஒழிக்கப்படும். மேலும், 3,500-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா்களின் பணியிடங்களும் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும். தனியாா் முதலாளிகள் சுங்கம் வரி வசூலுக்கு வழிவகை செய்யப்படும். எனவே, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். பதவி உயா்வு முறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா்கள் மலா்மன்னன், கோவிந்தராஜன், மாநில துணைத்தலைவா் மகேந்திரன், கோட்டச் செயலா் இளங்கோவன், மாவட்ட பொருளாளா் பிரான்சிஸ், மாவட்ட இணைச் செயலா்கள் செளந்தா், தா்மராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →