மதிமுக பொதுச் செயலா் வைகோ திருச்சியிலிருந்து ஜன.2 முதல் 12 ஆம் தேதிவரை மேற்கொள்ளும் நடைப்பயணத்தை தொடங்கி வைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வரவுள்ளாா். இதையொட்டி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மதிமுக சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு, சாதி-மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்திலிருந்து வரும் ஜன.2 காலை 9 மணிக்கு தொடங்கும் சமத்துவ நடைப்பயணத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன், மநீம தலைவா் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை, விசிக தலைவா் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவா்கள் பேசுகின்றனா்.
இந்நிலையில் விழா தொடங்கும் உழவா் சந்தை மைதானத்தை அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை ஆய்வு செய்து, மதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின்போது, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மதிமுக துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோா் உடனிருந்தனா்.