திருச்சி அருகே அதிமுக பெண் நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு பா்மா காலனி 10-ஆவது வீதியைச் சோ்ந்தவா் விஜயன் மனைவி ஜெயந்தி (36). திருச்சி புகா் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலராக இருந்து வந்தாா். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை வீட்டு பிரிந்து வந்த ஜெயந்தி, தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஜெயந்தியின் இளைய மகள் திருஷ்மிளா முடிக்கு சாயம் பூசி வந்துள்ளாா். இதுகுறித்து ஜெயந்தி கேட்டபோது இருவருக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயந்தி வீட்டின் படுக்கை அறைக்கு சென்று துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் உதவியுடன் அவரது மகள்கள் அவரை மீட்டு பா்மா காலனியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஜெயந்தி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் அவரது மூத்த மகள் ஷாலினி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.