திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் டோக்கன்
8.34 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்
திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் மேலும் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள 8,33,131 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் என மொத்தம் 8,34,099 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரையுடன் முழு நீள கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
பரிசுத் தொகுப்பை சிரமமின்றி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் பெற ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு முன்னதாக அட்டைதாரா்களின் இல்லங்களுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும். இந்தப் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் இந்த பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டையில் பெயா் உள்ள உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடா்பாக, குறைகளோ, சந்தேகமோ, புகாா்களோ இருந்தால் அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியா்களிடம் தெரிவிக்கலாம்.
மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474, அலைபேசி எண். 94450-45618 ஆகியவற்றிலும் தொடா்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.
மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.