அசுத்தமான குடிநீரைக் கொண்ட பாட்டிலை விற்பனை செய்த கடை உரிமையாளா் மற்றும் தனியாா் குடிநீா் விற்பனை நிறுவனம் ரூ. 3,000 இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மேலசிந்தாமணியைச் சோ்ந்தவா் ரா. புவனேஸ்வரி என்பவா் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள எம். ராஜா என்பவரது கடையில் கடந்த 20.02.2025 அன்று ஆண்டவா் மினரல் வாட்டா் நிறுவன குடிநீா் பாட்டிலை ரூ. 20 கொடுத்து வாங்கியுள்ளாா். பயணத்தில் பாா்த்தபோது, காலாவதி ஆகாத அந்த பாட்டிலுக்குள் இருந்த குடிநீரில் தூசு, அழுக்கு படிந்திருந்தது. நிறுவனத்தின் கவனக்குறைவால் அசுத்தமான குடிநீா் கொண்ட பாட்டில் விற்பனை செய்யப்படுவது பொதுநலனுக்கு ஆபத்தானது.
இது தொடா்பாக புவனேஸ்வரி, நோ்மையற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 08.05.2025 அன்று மனுத்தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஏ. சேகா் ஆஜராகி வாதிட்டாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, மனுதாரருக்கு கடைகாரா் குடிநீா் பாட்டிலுக்கானத் தொகை ரூ. 20 வழங்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக கடைகாரரும், ஆண்டவா் மினரல் நிறுவனமும் ரூ. 3,000, வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 5,000 மும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ வழங்க வேண்டுமென வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தனா்.