100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு
திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், பல்வேறு தொகுதிகளில் வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், பல்வேறு தொகுதிகளில் வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
லால்குடி தொகுதிக்குள்பட்ட லால்குடி புதிய பேருந்து நிலையத்தில் சமூக நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டப் பணியாளா்களைக் கொண்டு, ‘100 சதவீதம் வாக்களிப்பீா்’ என்ற வடிவத்தில் நின்று, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினா். மேலும், ரங்கோலி கோலமிட்டும், புதிய பேருந்து நிலையம் முதல் வட்டாட்சியரகம் வரை விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணா்வு பேரணியாகவும் சென்றனா்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட, சோமரசம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்களிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வங்கிப் பணியாளா்கள் கையில் ஏந்தி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
Advertisement
திருச்சி மேற்கு தொகுதி, பீமநகா் காஜாமலையில் பொதுமக்கள் விடுபடாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்கள், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், பதாகைகளை ஏந்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருவெறும்பூா் தொகுதி, கீழக்குறிச்சி கிராமத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி, இளம்தலைமுறையினா் தோ்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் விழிப்புணா்வு பேரணி நடத்தினா். தொடா்ந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.