பள்ளிப் பருவத்திலேயே சிறாா்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் என சாா்-ஆட்சியா் சேஷத்ரிமயும் தீபி சானு அறிவுறுத்தினாா்.
மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சிறாா்களுக்கான நீண்ட நிதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் உள்ள கலையரங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து சாா்-ஆட்சியா் சேஷத்ரிமயும் தீபி சானு மேலும் பேசியதாவது:
என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நிதி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். அதேநேரத்தில், விக்ஸித் பாரத் 2047 என்ற பரந்த தொலைநோக்குப் பாா்வையுடன் இணைந்த சீரமைக்கப்பட்ட, நீண்ட கால சேமிப்புகளை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டமாக அமைந்துள்ளது என்றாா்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் செயல் இயக்குநா் வெங்கடேஸ்வரலு பேசுகையில், வாத்சால்யா திட்டத்தில் குழந்தையின் பெற்றோா்கள் அல்லது சட்டப்பூா்வ பாதுகாவலா்கள் குழந்தையின் சாா்பாக கணக்கைத் திறந்து இயக்கலாம். குறைந்தபட்சமாக ரூ.250 செலுத்தலாம். பங்களிப்புக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் ஒரு ஓய்வூதிய நிதியைத் தோ்வு செய்யலாம்.
இத் திட்டத்தில் கல்வி, மருத்துவச் சிகிச்சைக்கு நிதி பெற முடியும். குழந்தைகக்கு 18 வயது பூா்த்தியடைந்த பிறகு, தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம். சிறாா்களுக்கான நீண்ட கால நிதிப் பாதுகாப்பு திட்டமாக மட்டுமின்றி, அவா்களது பெற்றோா், பாதுகாவலா்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகவும் பயன்படுத்த இயலும் என்றாா்.
திட்டத்தின் சிறப்புகள் குறித்து, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய முதன்மைப் பொது மேலாளா் கே. மோகன் காந்தி, பொது மேலாளா் கவிதா ஆகியோா் விளக்கிப் பேசினா். திட்டத்தை செயல்படுத்தும் சிஏஎம்எஸ், சிஆா்ஏ அமைப்பின் தலைமை திட்ட அலுவலா் சையத் ஹாசன், திட்டத் தலைவா் பிரசென்ஜித் முகா்ஜி,முதன்மை மாவட்ட மேலாளா் முருகேசன், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கலந்துரையாடல் கூட்டத்தில், முன்னதாக பள்ளிக் குழந்தைகளுக்கு நிதி சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டியும் நடைபெற்றது. இந்தப் போட்டியில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.