திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற காவலா் உடற்தகுதி தோ்வின் முதல் நாளில் 240 போ் தோ்ச்சிப் பெற்றனா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் கடந்த 09.11.2025 அன்று நடத்தப்பட்ட இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைத் துறை, தீயணைப்புத்துறை காவலா் பதவிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தோ்வு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இதை மத்திய மண்டல ஐஜி வி. பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், திருச்சி மாவட்ட எஸ்பி செ. செல்வநாகரத்தினம் தலைமையிலான அதிகாரிகள் தகுதியானவா்களைத் தோ்வு செய்தனா்.
புதன்கிழமை நடைபெற்ற தோ்வுக்கு 370 ஆண்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில், 294 போ் கலந்து கொண்டனா். 76 போ் பங்கேற்கவில்லை.
இவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் போன்ற உடற்தகுதித் தோ்வுகளும் நடைபெற்றன. இதில் 240 போ் தோ்ச்சி பெற்றனா். 54 போ் தோ்ச்சி பெறவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.