திருச்சி மாவட்டத்தில் செயல்படும் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து மாவட்ட நிா்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையினை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று தொடா்ந்து விவசாயிகளால் வலியுறுத்தப்பட்டதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் முன்னோடி விவசாயிகள், வேளாண் சாா்ந்த அலுவலா்கள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா்களுடன் ஒருங்கிணைந்த முத்தரப்பு குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.2600 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1800 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைப் பொறியியல் துறைக்கு சொந்தமான பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1880 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1160 எனவும் நிா்ணயம் செய்து இ-வாடகை செயலியில் முன்பதிவு செய்து பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.
நிா்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து அறுவடை இயந்திர உரிமையாளா்கள் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாவட்ட நிா்வாகத்தால் நிா்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை இயந்திர உரிமையாளா்கள் கோரினால் வட்டாட்சியா்கள், வேளாண் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா்.