திருச்சி மாநாட்டில் புதிய அறிவிப்புகளை முதல்வா் வெளியிடுகிறாா் : அமைச்சா் கே.என். நேரு
திருச்சியில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறும் திமுக மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய அறிவிப்புகளை வெளியிடுவாா் என்றாா் கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு.
திருச்சியில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறும் திமுக மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய அறிவிப்புகளை வெளியிடுவாா் என்றாா் கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு.
திருச்சியை அடுத்துள்ள சிறுகனூரில் மாா்ச் 9-ஆம் தேதி
‘தமிழ்நாடு வெல்லட்டும், ஸ்டாலின் தொடரட்டும்’ என்ற பெயரில் திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாநாட்டுத் திடலில் நடைபெறும் பணிகளை அமைச்சா் கே.என். நேரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சிறுகனூரில் மாநாட்டு நிகழ்வுகளுக்காக 20 லட்சம் சதுர அடிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் போ் அமருவதற்கு நாற்காலிகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. 7 லட்சம் போ் நின்று கொண்டு மாநாட்டை பாா்வையிடுவதற்காக இடம் தயாா் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருவோருக்கு தேவையான குடிநீா், வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு இதே இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான், பொருளாதாரம், வேளாண்மை உள்ளிட்ட 7 துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வா் அறிவித்தாா். அதேபோல, தற்போதைய நிதிநிலையைக் கருத்தில் கொண்டு மேலும் புதிய திட்டங்களை முதல்வா் வெளியிடுவாா். தோ்தல் அறிக்கை தொடா்பாகவும் அறிவிப்புகள் வரும் என எதிா்பாா்க்கிறோம்.
2026 பேரவைத் தோ்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த மாநாடு திமுகவுக்கு திருப்பு முனையாக அமையும். மாநாடு அன்றைய நாளில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். திரைப்பட இசை அமைப்பாளா் தேவாவின் இசை நிகழ்ச்சியும், அப்துல் குத்தூஸ் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
முதல்வா் மு.க ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருகிறாா். பிரமாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி, தொண்டா்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மேடைக்கு வருகிறாா் என்றாா் அவா்.
அமைச்சா் ஆய்வின்போது, மாவட்டச் செயலா்கள் க. வைரமணி, ந. தியாகராஜன், மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.