முகப்பு
வேலூர்

சக மனிதர்களுக்கு உதவுவோம்!

இறைவன் இவ்வுலகில் தாம் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும், அவனவன் இயல்புக்கேற்ப பல்வேறு திறமைகளைக் கொடுத்திருக்கிறார். சிலருக்குத் தேவைக்கு அதிகமான செல்வம் இருக்கிறது; சிலருக்கு ஆழ்ந்த அறிவு; சிலருக்கு வேலை

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:31 PM
பகிர்:

இறைவன் இவ்வுலகில் தாம் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும், அவனவன் இயல்புக்கேற்ப பல்வேறு திறமைகளைக் கொடுத்திருக்கிறார். சிலருக்குத் தேவைக்கு அதிகமான செல்வம் இருக்கிறது; சிலருக்கு ஆழ்ந்த அறிவு; சிலருக்கு வேலை நேரம் போக அதிக அளவில் ஓய்வு நேரம்! இவ்வாறு பல்வேறு விதங்களில்! இவையெல்லாம் எதற்காக என்று யோசித்துப் பார்த்திருக்கிறோமா? நமக்கு வழங்கப்பட்டுள்ள காலம், வீணடிப்பதற்காக அல்ல; சக மனிதர்களுக்குப் பயன்படுமாறு உதவுவதற்கே.

தெய்வப் புலவர் வள்ளுவர் பெருமான் கூறுவதும் இதுவே-

"ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு.'

நீர் நிறைந்துள்ள ஊர் நடுவேயுள்ள குளத்து நீரானது அந்த ஊர் மக்களனைவருக்கும் பயன்படுவதுபோல, நற்பண்புகளையுடைய செல்வந்தன் ஒருவனுடைய செல்வமும் பிறர் நலனுக்கெனவே செலவழிக்கப்படுகிறது. இதுவே இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் இயேசு கிறிஸ்து ஒரு உவமை மூலமாக இக்கருத்தை எடுத்துரைக்கிறார். நெடும் பயணம் செல்லவிருந்த ஒரு செல்வந்தன் தன் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்து பணமும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

தாலந்து என்பது 6000 திராக்மாவுக்குச் சமம். திராக்மா என்பது ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம். (மத்தேயு18 :24)

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவன் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, "ஐயா! ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர். இதோ பாரும்... இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். மகிழ்ச்சியடைந்த தலைவன், அவனை இன்னும் பெரிய பொறுப்புகளில் அமர்த்தினார்.

இரண்டு தாலந்தைப் பெற்ற பணியாளனும் அவரையணுகி, "ஐயா, வாணிபம் செய்து மேலும் இரண்டு தாலந்து சம்பாதித்துள்ளேன்' என்றான். திருப்தியடைந்த தலைவனும், அப்பணியாளனிடமும் புதிய பொறுப்புகளை ஒப்படைத்தார்.

ஒரு தாலந்தைப் பெற்ற பணியாளனோ அவனிடம் வந்து, "ஐயா! நீர் மிகக் கடுமையானவர் என்று எனக்குத் தெரியும். எனவே மிகப் பத்திரமாக அதை மண்ணுக்கடியில் புதைத்து வைத்திருந்து இதோ கொண்டு வந்துள்ளேன்' என்று கூறி ஒரு தாலந்தைக் கொண்டு வந்து கொடுத்தான். கோபமுற்ற தலைவன் அத்தாலந்தையும் மேற்கூறிய மற்ற இரு பணியாளரிடம் ஒப்படைத்துவிட்டு, சோம்பேறியான வேலைக்காரனுக்கு உரிய தண்டனையும் கொடுத்தார்.

எனவே இறைவன் நமக்களித்துள்ள செல்வத்தையோ, திறமைகளையோ வீணாகப் புதைத்து வைக்கக் கூடாது.  எவ்வளவுக்கதிகமாக வசதிகளையும், வாய்ப்புகளையும் கடவுள் ஒருவனுக்குக் கொடையாகக் கொடுத்திருக்கிறாரோ, அவ்வளவுக்கும் மேலாக சக மனிதர்கள் மேல் அக்கறை கொள்ள நாம் எதிர்பார்க்கப்படுகிறோம். இதுவே இறைவனது படைப்பின் குறிக்கோள்!

பசித்த வயிறுகள் வாயிலில் காத்திருக்க, பெட்டியில் வைத்துப் பூட்டப்படும் பணத்தினால் வரும் பயன் என்ன? "எம்முடைய திறமைகளையும், பொருளையும், நேரத்தையும் வீணாக்காமல், பிறர் நலனுக்காகச் செலவிடும் மனப் பக்குவம் தாரும் இறைவா!' என எல்லாம் வல்ல பரம் பொருளிடம் இறைஞ்சுவோம்!

முழு கட்டுரையைப் படிக்க →