முகப்பு
வேலூர்

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித நேசம் அல்ல!

வேலூர், ஜூலை 22: வேலூர் அருகே தாயை விட்டுப் பிரிந்த குரங்கு, ஆடுகளை மேய்க்கும் பணியைச் செய்து வருகிறது.  ஆடுகளைப் பட்டியிலிருந்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது உடன் செல்வது, அவை பாதுகாப்பாக மேய்வ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:24 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:19 PM

வேலூர், ஜூலை 22: வேலூர் அருகே தாயை விட்டுப் பிரிந்த குரங்கு, ஆடுகளை மேய்க்கும் பணியைச் செய்து வருகிறது.

 ஆடுகளைப் பட்டியிலிருந்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது உடன் செல்வது, அவை பாதுகாப்பாக மேய்வதை உறுதி செய்வது, அதில் ஒன்று திசை மாறிச் சென்றாலும் அதன் முன்பு சென்று சேஷ்டை செய்து, அதை பிற ஆடுகள் பக்கம் திருப்பிவிடுவது, அவற்றோடு பட்டிக்கு உடன் வந்து, ஆடுகளின் மீதேறி அமர்ந்து கொண்டு அவற்றைக் கண்காணிப்பது உள்பட மேய்ப்பனுக்குரிய அனைத்துச் செயல்களையும் இந்தக் குரங்கு செய்து வருகிறது.

 வேலூர் அடுத்துள்ள வள்ளிமலை அருகே பெருமாள்குப்பத்தில் வசிக்கும் விவசாயி ஆர்.வேலாயுதம் (40) என்பவரது ஆட்டு மந்தைக் கூட்டத்தின் நடுவே, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தாயை விட்டுப் பிரிந்த குட்டிக் குரங்கை சிறுவன் ஒருவன் விட்டுச் சென்றிருக்கிறான்.

Advertisement

 அப்போது முதலே, அங்கிருக்கும் ஆடுகளையே தன் உறவாகக் கருதி வளர ஆரம்பித்துள்ளது இந்தக் குரங்கு. வேலாயுதம் பல முறை விரட்டிப் பார்த்தும், இந்தக் குரங்கு அங்கிருந்து செல்லவில்லை. முயற்சி தோல்வியில் முடிந்ததால், குரங்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று ஒருவழியாக விட்டுவிட்டார் வேலாயுதம்.

 ஆனால், அவரது பணிப் பளுவை பாதியாகக் குறைத்து விடுகிறது இந்தக் குரங்கு. காலை 10 மணிக்கு ஆடுகளை ஓட்டிச் செல்லும் வேலாயுதம், மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். வீட்டருகே ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மலையடிவாரத்தில் இந்த ஆடுகள் மேயும். இவற்றை மரக்கிளை ஒன்றின் மீது அமர்ந்து இந்தக்  குரங்கு கண்காணிக்கும்.

 ஆடுகள் மாலையில் வீடு திரும்பும்போது அவற்றோடு வரும் குரங்கு, பட்டியில் அடைக்கப்பட்டதும் ஆடுகள் மீதேறி அமர்ந்துகொள்ளும். வேலாயுதம் மனைவி கன்னியம்மாள் தரும் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, பட்டிக்குக் காவலனாக அங்கேயே தங்கியிருக்கும். கடந்த இரு ஆண்டுகளாக, ஆடுகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறது இந்தக் குரங்கு.

 வேலாயுதம் வளர்க்கும் ஆடுகளைத் தவிர பிற ஆடுகள் அருகே வரும்போது அவற்றை இந்தக் குரங்கு விரட்டியடிக்கும். ஆடுகளோடு பழகினாலும், அது வேலாயுதத்துக்கு விசுவாசமாகவே நடந்து வருகிறது.

 வளர்ந்த கிடாவின் மீதேறி மற்ற ஆடுகளை குரங்கு கவனிக்கும். வளர்ந்த கிடாவை, வேலாயுதம் கறிக்கு விற்பனை செய்த பிறகு, அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் பெரிய ஆட்டின் மீதேறி, மற்ற ஆடுகளை இந்தக் குரங்கு கண்காணித்து வருகிறது. ஆடுகளை விற்பனை செய்யும்போது, குரங்கு எந்த இடையூறும் செய்வதில்லை.

 இருக்க இடமும், உணவும் தரும் வேலாயுதத்துக்கு உற்ற தோழனாக, சிறந்த ஆடு மேய்ப்பனாக இருந்து வருகிறது இந்தக் குரங்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.