முகப்பு
வேலூர்

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க ஆளில்லை!

வேலூர், ஜூலை 23: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கொண்டுவரப்பட்ட தத்தெடுப்புத் திட்டம் பொதுமக்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.  பள்ளி வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறு

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:26 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:20 PM

வேலூர், ஜூலை 23: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கொண்டுவரப்பட்ட தத்தெடுப்புத் திட்டம் பொதுமக்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

 பள்ளி வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்விப் புரவலர்கள் உள்ளிட்டோருக்கு அரசுப் பள்ளிகளைத் தத்து கொடுக்கும் திட்டம் கடந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

 இதன்படி, பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்புவோர் தொடக்கப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம், நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் நன்கொடை அளிக்க வேண்டும்.

Advertisement

 அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோருடன் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டு, அப் பள்ளிக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டும். தேவைப்பட்டால் மேலும் இரு ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

 இத் திட்டத்தின்படி, பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பள்ளிகளுக்குக் கூடுதல் இடம் அளிப்பது, கற்பித்தல் முறையில் புதுமைகளைப் புகுத்துவது, பள்ளி மற்றும் மாணவர்கள் நலனுக்கு தேவையான பணிகள் ஆகியவற்றை தத்தெடுப்போர் மேற்கொள்ளலாம் எனக் கல்வித்துறை அறிவித்தது.

 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவது, சேர்க்கை பாதிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகள் நிலவும் சூழலில், தனியார் பள்ளிகளுக்கு நிகரான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக் கல்வித்துறையினர் நம்பினர்.

 ஆனால், அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை பொதுமக்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

 வேலூர் மாவட்டத்தில் 2,041 தொடக்கப்பள்ளிகள், 545 நடுநிலைப்பள்ளிகள், 135 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 121 மேல்நிலைப்பள்ளிகள், 4 நகராட்சி உயர்நிலை, 3 நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன.

 ஆனால், மொத்தம் 3 பள்ளிகள் மட்டுமே, பள்ளி வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தனியாரால் தத்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த 3 பள்ளிகளையும் கூட ஒருவரே தத்தெடுத்திருக்கிறார்.

 அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கும் திட்டத்தை தனியாரிடம் கொண்டு சேர்க்கும் பணியில், அந்தந்த மாவட்ட கல்வித்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

 தோல்விக்குக் காரணம் என்ன? அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படும் திட்டம் பற்றி மக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

 அரசுப் பள்ளிகளைத் தங்களது பள்ளிகளாக பாவித்து, தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்துதர மக்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை, மக்களிடம் நேரடியாக முன்வைக்கப்படவில்லை. இதனால், பள்ளிகள் தத்தெடுக்கும் திட்டம் பற்றிப் பலருக்குத் தெரியவில்லை.

 தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தைவிட, ஆசிரியர்களுக்கும், பெற்றோர்-ஆசிரியர் கழகங்களுக்கும் இருக்கும் "சுதந்திரம்' பற்றித் தெரிந்த சிலரும், ஒப்பந்தத்துடன் கூடிய கட்டாய இணைப்பை செய்துகொள்ள முன்வரவில்லை.

 பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும் தத்தெடுக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்று கருதுவதால், அரசுப் பள்ளிகளை ஏற்று நடத்த தனியார் அமைப்புகள் தயக்கம் காட்டுகின்றன என்றும் காரணம் சொல்லப்படுகிறது.

 ஆனாலும், தத்தெடுக்கும் திட்டம் தோல்வியடைந்தாலும், அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளைத் தனி நபர்கள் பலர் செய்து தருகின்றனர். ஒருவராகவோ, கூட்டாகவோ இணைந்து, பள்ளிக்கு புதிய கட்டடம், கணினி, தளவாடப் பொருள்கள், மாணவ, மாணவியருக்கான கூடுதல் சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அதே பள்ளியில் படித்தவர்களாகவே இருக்கின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.