கண்தான விழிப்புணர்வில் பட்டதாரி இளைஞர் கொல்கத்தாவில் இருந்து வேலூருக்கு சைக்கிளில் வந்தார்
வேலூர், ஜன. 8: கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி இளைஞர் சயான் மண்டல் (படம்) கண்தான விழிப்புணர்வு பயணமாக சைக்கிளில் வேலூருக்கு வெள்ளிக்கிழமை வந்தார். பி.எஸ்ஸி. (புவியியல்) பட்டதாரியான இவர் படிக்க
வேலூர், ஜன. 8: கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி இளைஞர் சயான் மண்டல் (படம்) கண்தான விழிப்புணர்வு பயணமாக சைக்கிளில் வேலூருக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
பி.எஸ்ஸி. (புவியியல்) பட்டதாரியான இவர் படிக்கும் காலத்தில் கண் பாதிப்பு அடைந்த சக மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
இதனால் சர்வதேச கண்தான வங்கியை அணுகியபோது, உலகில் 30 சதவீதம் பேர் கண் பார்வை குறைபாட்டை சந்திப்பதாகவும், இறப்பவர்களின் கண்களை இவர்களுக்கு பொருத்தி மீண்டும் கண்பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்ற தகவல் அளித்தனர்.
இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்த இவருக்கு பெற்றோரும் உறுதுணையாக இருந்துள்ளனர். அதையடுத்து 7.11.2010-ல் சைக்கிள் பயணம் மூலம் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினார்.
510 நாள்களில் சுமார் 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கத் திட்டமிட்டு, இதுவரை 3,600 கி.மீ. பயண தூரத்தை கடந்துள்ளார்.
ஒரிசா, சத்தீஸ்கர், ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்துக்கு வந்துள்ள இவரை சென்னையில் சங்கர நேத்ராலயா அமைப்பினர் வரவேற்று உதவிகளை புரிந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வழியாக வேலூர் வந்த அவரை உதவும் உள்ளங்கள் அமைப்பினரும், செஞ்சிலுவை சங்கத்தின் காட்பாடி கிளை நிர்வாகிகளும் வரவேற்று உதவி புரிந்துள்ளனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தன்னார்வ அமைப்புகள் துண்டு பிரசுரங்களை அச்சடித்து அவருக்கு வழங்கி வருவதாக சயான் மண்டல் தெரிவித்தார்.