ஆபத்தான பயணத்தில் மாணவர்கள்!
வேலூர், நவ. 15: அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ்களுடன் பயணிக்கும் மாணவர்கள் இட நெருக்கடியால் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதைப் போக்க வழித் தடங்களில் அரசு பஸ்களின் எண
வேலூர், நவ. 15: அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ்களுடன் பயணிக்கும் மாணவர்கள் இட நெருக்கடியால் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதைப் போக்க வழித் தடங்களில் அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றே பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சில கி.மீ. இடைவெளியில் பல ஆரம்பப் பள்ளிகள் அமைந்துவிடுகின்றன.
ஆனால், உயர்நிலை, மேல்நிலைப் படிப்புக்காக மாணவர்கள் நகரங்களுக்கோ அல்லது சில கி.மீ. தூரத்தில் வேறு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல நேரிடுகிறது.
இதற்காக கிராமப் புற ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து கல்வி கற்க ஏதுவாக இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்கள் ஆட்சிகள் மாறினாலும், தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அரசின் கல்வித் துறை ஆண்டுதோறும் நிதி வழங்குகிறது.
இருப்பினும், அரசு பஸ்களில் பயணிக்கும் மாணவர்களை ஏதோ இலவசமாக ஏற்றிச் செல்வதைப் போல அவர்களை தரக்குறைவாக டிரைவர், கண்டக்டர்கள் பேசுவதாகவும் புகார்கள் உள்ளன.
இந்நிலையில், சில வழித்தடங்களில் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் ஒரே பஸ்ஸில் 200-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனால் படிக்கட்டுகளில் நின்றும், பஸ்களின் மேற்கூரையிலும் மாணவர்கள் பலர் அன்றாடம் பயணிக்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் விபத்துகளில் சிக்கிக நேரிடுகிறது.
நாள்தோறும் ஆபத்தான பயணங்களிலேயே மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்றுவருகின்றனர். இத்தகைய சூழ்நிலை மாற வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
"மாணவர்களிடம் தரக்குறைவாகப் பேசும் பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நேரங்களுக்கு மாணவர்கள் பாதுகாப்பான பயணம் செல்ல ஏதுவாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இல்லையெனில், காலை, மாலை நேரங்களில் "ஸ்டூடன்ட்ஸ் ஸ்பெஷல் பஸ்'களை இயக்க வேண்டும்' என்பதே அவர்களின் கோரிக்கை.
மாணவர்களுக்கு கல்வி, பாடப் புத்தகங்கள், மடிக்கணினி, சீருடைகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, பஸ் பயண விஷயத்திலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே மாணவர்களும் விரும்புகின்றனர்.