முகப்பு
வேலூர்

படகு சவாரி இல்லாத சாத்தனூர் அணை

செங்கம், ஏப். 10: செங்கத்தை அடுத்த சாத்தனூர் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை ஒரு முக்கிய சுற்றுலாத்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

செங்கம், ஏப். 10: செங்கத்தை அடுத்த சாத்தனூர் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த அணை 1957ஆம் ஆண்டு ரூ. 4.5 கோடி செலவில் கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த அணைக்கு திருவண்ணாமலை பகுதியிலிருந்து மட்டுமல்லாது, பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழா நாள்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து அணையின் அழகை கண்டுகளிக்கின்றனர். இந்நாள்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அணையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் முதலைப் பண்ணை, நீச்சல் குளம், பேட்டரி கார், சிறுவர் பூங்கா, மான்கள், மயில்கள் விளையாடும் உயிரியியல் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

முன்பு இங்கு, மீன் விற்பனை நிலையத்துக்கு எதிரே உள்ள குளத்தில் படகு சவாரி இயக்கப்பட்டு வந்தது. இந்தப் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர். தற்போது படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து அணை ஊழியர்களிடம் விசாரித்த போது, சில இடங்களில் தண்ணீர் கசிவதால் குளத்தில் தண்ணீர் நிற்பதில்லை. அதனால் தற்போது படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் கசிவு சரிசெய்யப்பட்டு படகு சவாரி தொடங்கப்பட்டுவிடும் என்றனர்.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து படகு சவாரியை தொடங்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →