முகப்பு
வேலூர்

சமூக விரோதிகளின் கூடாரமாய் மாறிவிட்ட குழந்தைகள் மையம்

அரக்கோணம், பிப். 5:   அரக்கோணம் அருகே செய்யூரில் உள்ள குழந்தைகள் மையம் சமூக விரோதிகளின் கூடாரமாய் மாறியுள்ளது. பராமரிப்பே இல்லாத இக்கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த கிராம மக்களிடம் வலு

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

அரக்கோணம், பிப். 5:   அரக்கோணம் அருகே செய்யூரில் உள்ள குழந்தைகள் மையம் சமூக விரோதிகளின் கூடாரமாய் மாறியுள்ளது. பராமரிப்பே இல்லாத இக்கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த கிராம மக்களிடம் வலுத்து வருகிறது.

செய்யூர் ஊராட்சியில் செய்யூர் காலனியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவருந்தி வருகின்றனர். இக்கட்டடம் இப்போது பராமரிப்பு இல்லாமல் கதவுகள் உடைந்து சீரழிந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள், தங்களது அன்றாடச் செயல்களுக்குப் பாதுகாப்பான பகுதியாக அதை மாற்றியுள்ளனர். மேலும் கால்நடைகளும் உள்ளே சென்று தங்கிக்கொள்கின்றன.

காலையில் மையத்துக்கு பணிக்கு வரும் பெண்கள், அந்த அறையில் இருக்கும் கால்நடைகளை வெளியே அனுப்பி, அவற்றின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவதும், அங்கு சமூகவிரோதிகள் விட்டுச் செல்லும் பொருள்களை அப்புறப்படுத்திய பிறகே குழந்தைகள் உள்ளே செல்ல வைப்பதும் நடந்து வருகிறது.

இதனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த மையத்துக்கு அனுப்பவே தயங்குகின்றனர். சில பெற்றோர், குழந்தைகள் உணவைப் பெற்றுக்கொண்டவுடன் அவர்களை அழைத்துச் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சித் தலைவர் சீனிவாசன் பல முறை அரசு உயரதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அரக்கோணம் வட்டார மேற்பார்வையாளரோ, கோட்ட அளவிலான அதிகாரிகளோ, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளோ இந்த மையத்தை பார்வையிட வரவில்லையாம்.

எனவே மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு செய்யூர் காலனியில் உள்ள குழந்தைகள் மையக் கட்டடம் மற்றும் கதவுகளை சீர்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.