சிறப்பாசிரியர்கள் நியமனம் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு
திருவண்ணாமலை, ஜன. 23: சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தமிழகத்திலேயே திருவண்ணாமலையில் மட்டும்தான் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடல்தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் ப
திருவண்ணாமலை, ஜன. 23: சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தமிழகத்திலேயே திருவண்ணாமலையில் மட்டும்தான் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடல்தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, வாழ்க்கைக் கல்வி போன்ற சிறப்பாசிரியர்கள் மாதம் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் 944 பேர் நியமனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 315 உடற்கல்வி ஆசிரியர்கள், 308 ஓவிய ஆசிரியர்கள், 101 கணினி ஆசிரியர்கள், தலா 50 தையல், இசை ஆசிரியர்கள், தலா 40 கட்டட சிற்பக்கலை, வாழ்க்கையியல், கட்டடவியல் ஆசிரியர்கள் என மொத்தம் 944 பேர் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர்கள் 883 பேர், கலை ஆசிரியர்கள் 601 பேர், வாழ்க்கையல் பிரிவில் 1665 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரு நாள்கள் உடல் தகுதித் தேர்வு!
இந்நிலையில், சிறப்பாசிரியர்கள் தேர்வுக் குழுவின் தலைவரான ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உடற்கல்வி ஆசிரியர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி, 20 முதல் 25, 25 முதல் 30, 30 முதல் 35, 35 முதல் 40, 40 முதல் 45 வயதுப் பிரிவுகளில் ஆண்களுக்கு 400 மீ, பெண்களுக்கு 100 மீ. ஓட்டப்பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உடல்தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
திங்கள்கிழமை மாவட்ட விளையாட்டரங்கில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 25 வயது வரை உள்ளோர் 60 விநாடிகளிலும், 30 வயது வரை உள்ளோர் 70 விநாடிகளிலும், 35 வயது வரை உள்ளோர் 80 விநாடிகளிலும், 40 வயது வரை உள்ளோர் 90 விநாடிகளிலும் 400 மீட்டரை கடக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான உடற்கல்வி ஆசிரியர்களால் இத்தகுதியை எட்ட இயலவில்லை.
இதேபோல், பெண்களுக்கான 100 மீ. உடல்தகுதித் தேர்விலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடக்க முடியவில்லை. தொடக்க நாளன்று வந்த 500 உடற்கல்வி ஆசிரியர்களில் 50-க்கும் மேற்பட்டோரே தகுதி நேரத்தை கடந்தனர்.
அதிருப்தியில் உடற்கல்வி ஆசிரியர்கள்!
உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பதாரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் தான் உடல்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆட்சியர் மிஸ்ரா முடிவு எடுத்தார். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்களால் உடல்தகுதியை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.