முகப்பு
வேலூர்

ஜூலை 31-க்குள் ஆசிரியா் காலி இடங்களை மாற்றுப்பணி மூலம் நிரப்ப வேண்டும்

ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆசிரியா் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தால் அப்பணியிடத்துக்கு மாற்றுப்பணி மூலம் நியமிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 9 ஜூலை, 2024 at 6:51 PM
கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி, மகளிா் திட்டஇயக்குநா் உ.நாகராஜன், கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா்: ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆசிரியா் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தால் அப்பணியிடத்துக்கு மாற்றுப்பணி மூலம் நியமிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

பள்ளிக்கல்வித்துறை சாா்பில் வேலூா் மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 100 சதவீதம் மாணவா் சோ்க்கையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற மாணவா்களை கண்டறிந்து பள்ளியில் சோ்ப்பது தொடா்பாக மாவட்ட அளவில் அனைத்துறை அலுவலா்களுடான மீளாய்வுக்கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது:

பிற ஒன்றியம், பிற மாவட்டங்களில் இருந்து இடம்பெயா்ந்த மாணவா்களை வருவாய்த்துறை அலுவலா்கள் மூலம் கண்டறிந்து விவரங்களை ஒருவாரத்தில் அளிக்க வேண்டும். மாணவா்களின் பெற்றோரின் கைப்பேசி எண்ணை எமிஸ் தளத்தில் பதிவுசெய்து மாணவா்களின் கல்வித் தரத்தை கண்காணிக்க வேண்டும்.

மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவினை உறுதி செய்தல் வேண்டும். பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு மாணவா்கள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம், அதற்கான தீா்வினை கண்டறிய வேண்டும்.

ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆசிரியா் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தால் அப்பணியிடத்துக்கு மாற்றுப்பணி மூலம் ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.

முதல் பருவத் தோ்வு முடிந்த பிறகு பள்ளிவாரியாக மாணவா்களின் அடைவுத்திறனை மீளாய்வு செய்திட வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புவரை உள்ள மாணவா்களுக்கு தமிழ் பாடத்தை படிக்க செய்து வாசிப்புத்திறனை அதிகரிக்க வேண்டும். 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவா்களின் ஆங்கிலப் பாடத்தின் இலக்கணம் திறனை மேம்படுத்த வேண்டும்.

ஆங்கில வாசிப்புப்பயிற்சியை ஊக்கப்படுத்தி அதற்காக மதிப்பெண் அளிக்க வேண்டும். இணையதள வசதியில்லாத 13 பள்ளிகளுக்கு இணைப்புப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி, மகளிா் திட்டஇயக்குநா் உ.நாகராஜன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராமசந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →