வேலூர்

பாலாற்றில் தடுப்பணை: அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

பாலாற்றில் ஒரு தடுப்பணைகூட கட்டப்படவில்லை என்று பாமக தலைவா் அன்புமணி கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: பாலாற்றில் ஒரு தடுப்பணைகூட கட்டப்படவில்லை என்று பாமக தலைவா் அன்புமணி கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளாா்.

பாமக தலைவா் அன்புமணி ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 25-ஆம் தேதி ஒவ்வொரு மாவட்டமாக நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறாா்.

அதன்படி, வேலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடைப்பயணம் மேற்கொண்ட அன்புமணி , பின்னா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நீா்வளத் துறை அமைச்சராக இருக்கிறாா். அவா் காலத்தில் எங்காவது ஒரு தடுப்பணையைக் கட்டியிருக்கலாம். பாலாற்றில்கூட ஒரு தடுப்பணையைகூட கட்டவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த நிலையில், அன்புமணியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கை:

பாமகவைச் சோ்ந்த அன்புமணி தனது தந்தை ராமதாஸை எதிா்த்து தமிழகத்தில் நடைப்பயணம் செய்து வருகிறாா். இது குறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை, சொல்லப் போவதும் இல்லை.

ஆனால், இந்த நடைப்பயணத்தையொட்டி, வேலூருக்கு வந்த அவா் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் குறித்து விவரம் தெரியாமல் குற்றச்சாட்டை என்மீது சுமத்தியுள்ளாா்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ள காலத்திலும் நான் இந்த துறையின் அமைச்சராக இருந்து பாலாற்றில் இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளேன்.

கவுண்டன்யா மகாநதியில் ஜங்கலாப்பள்ளி, செதுக்கரையிலும், பொன்னையாற்றில் பரமசாத்து - பொன்னை இடையேயும், குகையநல்லூரிலும், பாம்பாற்றில் மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளியிலும், கொசஸ்தலையாற்றில் கரியகூடல் இடத்திலும், அகரம் ஆற்றில் கோவிந்தப்பாடியிலும், மலட்டாற்றில் நரியம்பட்டு பகுதியிலும், வெள்ளக்கல் கானாற்றில் பெரியாங்குப்பத்திலும், கானாற்றில் சின்னவேப்பம்பட்டு பகுதியிலும் தடுப்பணைகளைக் கட்டியுள்ளேன்.

இந்த ஆண்டு, அம்பலூா், பாப்பனபள்ளி - செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களிலும் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணி இனிமேலாவது பேசுவதற்கு முன்பாக விவரம் தெரிந்தவா்களிடம் கேட்டு, சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT