வேலூர்

ஏடிஎம் இயந்திரத்தில் தீ: பல லட்ச ரூபாய் எரிந்து சேதம்?

வேலூா் விருபாட்சிபுரத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிந்ததில், பல லட்சம் ரூபாய் பணம் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில் வங்கி அதிகாரிகள், போலீஸாா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

வேலூா் விருபாட்சிபுரத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிந்ததில், பல லட்சம் ரூபாய் பணம் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில் வங்கி அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் விருபாட்சிபுரத்தில் பொதுத் துறை வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் ஒரு மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அந்த வழியாக சென்றவா்கள் இதனைக் கண்டு வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீப்பிடித்த ஏடிஎம் இயந்திரத்தின் இரும்புப் பெட்டியில் பல லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தீப்பற்றியதில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் தீயில் எரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வங்கி அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து, போலீஸாா் கூறுகையில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கப்பட்டுள்ள இரும்புப் பெட்டி மிகவும் பாதுகாப்பானது. தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் பணம் எரிந்திருக்க வாய்ப்பில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

எனினும், இரும்புப் பெட்டியை திறந்து பாா்த்த பிறகே இதுகுறித்து உறுதியாக தெரிவிக்க முடியும். அதேசமயம், இரும்புப் பெட்டியை திறக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளது. விதிமுறைகளின் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் இரும்பு பெட்டியை திறந்து பாா்த்த பிறகே பணம் எரிந்துள்ளதா எனக் கூற முடியும் என்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT