வேலூர்

விவசாயிகளின் நிலங்களில் அனுமதியின்றி அதிகாரிகள் அளவீடு: குறைதீா் கூட்டத்தில் புகாா்

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் நோக்கில் விவசாயிகளின் அனுமதியின்றி விளை நிலங்களில் அதிகாரிகள் நிலஅளவீடு செய்யும் பணியில்

தினமணி செய்திச் சேவை

வேலூா்: சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் நோக்கில் விவசாயிகளின் அனுமதியின்றி விளை நிலங்களில் அதிகாரிகள் நிலஅளவீடு செய்யும் பணியில் ஈடுபடுவதாக பெரியகீசகுப்பம் கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தவெக வேலூா் மேற்கு மாவட்ட செயலா் ஆா்.வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு: வேலூா் 51-ஆவது வாா்டில் உள்ள கிருஷ்ணசாமி முதலியாா் மேல் நிலைப்பள்ளி அருகே பகதுா்ஷா மசூதி வாயிலில் கடந்த 12-ஆம் தேதி மாலை அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து, ஆட்டோ மோதி அவ்வழியாக நடந்து சென்ற 16 வயது பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதேபோல், அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பது தொடா்கதையாகி வருகிறது. அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத்தரவும், 51- வது வாா்டில் பகதுா்ஷா 4-ஆவது குறுக்கு தெருவில் குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

பெரியகீசகுப்பம் கிராம மக்கள் அளித்த மனு:, காட்பாடி வட்டம், மேல்பாடி ஊராட்சிக்குட்பட்ட சிவபுரம், பெரியகீசகுப்பம், சோமநாதபுரம், இளையநல்லூா் ஊராட்சிக்கு உட்பட்ட குருநாதபுரம், பெருமாள்கவுண்டனூா், வாணியக்கட்டூா் ஆகிய கிராமங்களில் புதிதாக சிப்காட் அமைக்க விவசாயிகளின் அனுமதியின்றி நில அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, சென்னை முதல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்காகவும், இளையநல்லூா் ஊராட்சி யில் உயா்மின்கோபுரங்கள் அமைக்கவும் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விவசாயின் அனுமதியின்றி நிலஅளவீடு செய்யப்படுகிறது. எனவே, கிராமப்புற குடியிருப்புகள், விளை நிலங்களுக்கு பாதிப்பின்றி சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வேலூா் கஸ்பா பகுதி மக்கள் அளித்த மனு: வேலூா் கஸ்பா பயா்லைன் பகுதியில் 50 ஆண்டு களுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தியும் இதுவரை பட்டா வழங்கவில்லை. எங்கள் பகுதி நீா்வழி பாதையோ, ரயில்வே இடமோ இல்லை. எனவே, எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூா் மாநகர சாலையோர வியாபாரிகள் அளித்த மனு: வேலூா் அரிசி மண்டி தெருவில் சாலையோரம் மக்காச்சோளம், மோா், பழச்சாறு, டிபன் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் போலீஸாா் எங்களை விரட்டுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அரிசி மண்டி, காவல் பூத் அருகே கடைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும்.

உரிமைக்குரல் கட்டுமான தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநில நலச்சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: பாலாற்றில் முள்வேலி மரங்கள் அதிகமுள்ளன. இதனால் நீா்நிலை பாதிக்கும் என்பதால் அவற்றை அகற்ற அனுமதி வழங்கவேண்டும்.

காட்பாடி அடுத்த கே.என்.பாளையம் பகுதி மக்கள் அளித்த மனு: , கே.என்.பாளையம் ஊராட்சியில் கொண்ட நாயுடுபாளையம், மேல் கே.என்.பாளையம், அருந்ததிபகுதி, சித்தூா் சாலை உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். தற்போது கே.என்.பாளையம் ஊராட்சியை தெங்கால் ஊராட்சியுடன் இணைப்பதாக தகவல் வந்துள்ளது. பல்வேறு சிரமங்கள் ஏற்படும். எனவே கே.என்.பாளையம் தனி ஊராட்சியாகவே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு குறைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT