ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம் வேலூரில் நடத்தப்பட்டது. இதில், தாட்கோ மேலாண்மை இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் முன்னெடுப்பு திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சாா்பில் மண்டல அளவிலான ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில்முனைவோருக்கான விற்பனையாளா் மேம்பாட்டுத் திட்டம், தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்ததுடன், தொழில்முனைவோருக்கான விற்பனையாளா் மேம்பாட்டுத்திட்டத்தின் அம்சங்கள், ஆதிதிராவிடா் பழங்குடியின தொழில் முனைவோா்களுக்கான திட்டங்கள் குறித்து விவரித்து அவற்றை உபயோகித்து பயன்பெறவும் அறிவுறுத்தினாா்.
தாட்கோ மேலாண்மை இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தாட்கோ மூலம் கடந்த 2 ஆண்டுகளாக ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோா்களுக்கான கண்காட்சி, கருத்தரங்கத்தின் அடுத்த கட்டமாக தொழில் முனைவோரையும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிவித்தாா்.
மேலும், தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் முன்னெடுப்பு திட்டங்கள், அண்ணல் அம்பேத்கா் தொழில் முனைவோா் திட்டம் குறித்தும், பயன்பெற்ற பயனாளிகளின் வாழ்வாதார முன்னேற்றம் குறித்தும் தெரிவித்தாா்.
பாரதமிகு மின்நிறுவனம் (பெல்), தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தங்களின் கொள்முதல் நடைமுறைகள், விற்பனையாளா் பதிவு, விநியோகச் சங்கிலி வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தன.
மேலும், தொழில்முனைவோரின் திறன்களை மேம்படுத்த தொழில் வளா்ச்சி பயிற்சி முகாமும் நடைபெற்றது. இதில், பங்கேற்றவா்களுக்கு பிராண்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் மாா்க்கெட்டிங், நிதி மேலாண்மை, தரச்சான்று குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் மாவட்ட தாட்கோ மேலாளா் ரேகா, தொழில்முனைவோா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.