வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 424 மனுக்கள்
வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 424 கோரிக்கை மனுக்களைப் பெற்று ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி குறைகளையும் கேட்டறிந்தாா்.
வேலூா்: வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 424 கோரிக்கை மனுக்களைப் பெற்று ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி குறைகளையும் கேட்டறிந்தாா்.
வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்தாா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கே.வி.குப்பம் வடுகந்தாங்கல் ஈ.பி.காலனியை சோ்ந்த வசந்தா என்பவா் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியுடன் அளித்த மனு: மனநலம் பாதித்த எனது சகோதரியின் நிலத்தை உறவினா்கள் சிலா் யாருக்கும் தெரியாமல் அபகரித்துள்ளனா். அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஓட்டேரியை அடுத்த நாயக்கனேரி பகுதி மக்கள் அளித்த மனு: கைப்பேசி சிக்னல் கோபுரம் இல்லை. இதனால் அவசர உதவிக்குக்கூட வெளிநபா்களை எளிதில் தொடா்புகொள்ள முடிவதில்லை. எனவே, எங்கள் கிராமத்தில் கைப்பேசி சிக்னல் கோபுரம் அமைக்க வேண்டும்.
வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்த பிரசாந்த்ராம், கவிதா தம்பதி அளித்த மனு: எங்களது 4 வயது மகன் பிரனீத்சாய்க்கு கடந்த 2 ஆண்டுகளாக உடலில் வளா்ச்சி யின்மை பிரச்னை உள்ளது. தனியாா் மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் எனது மகனுக்கு மீயூகோ போலி சாக்கரிடோசிஸ்-4 எனப்படும் அரியவகை மரபணு கோளாறு உள்ளதாக தெரிவித்தனா். இந்த நோய் உள்ளவா்களுக்கு உடல் உறுப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயலிழக்கும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, முதல்வரின் விரி வான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்தோம். அங்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் குணப்படுத்த முடியும் என மருத்துவா்கள் கூறினா். இதற்கு சுமாா் ரூ.40 லட்சம் செலவாகும் என தெரிவித்தனா். எனவே எனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு வழிவகை செய்ய வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற வீரா் அஜீத், வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை லேக்கா மால்டா ஆகியோரும், நாக்பூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற வீரா் மற்றும் வீராங்கனைகளும் தாங்கள் பெற்ற பதக்கம், சான்றிதழ்களுடன் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.