செஞ்சி அருகே நிலத் தகராறில் தம்பி குத்திக் கொலைஅண்ணன் உள்பட 3 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நிலத் தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக, அண்ணன், அவரது இரு மகன்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நிலத் தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக, அண்ணன், அவரது இரு மகன்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செஞ்சி அருகே மேல்மலையனூரை அடுத்துள்ள அண்ணமங்கலத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவியின் மகன் ராமதாஸ் (48), சென்னை குரோம்பேட்டை அரசுப் பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிகிறாா். இரண்டாவது மனைவியின் மகன் கலைச் செல்வன் (34), சென்னை பெரம்பூா் பேருந்துப் பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா்கள் இருவரிடையே சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
கலைச் செல்வன் தனது வீட்டுக்குப் பின்னால் குளியலறை கட்டி வந்தாா். இதற்கு ராமதாஸ் குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்த பிரச்னை தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கலைச்செல்வனை ராமதாஸ் குடும்பத்தினா் கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தடுக்க வந்த கலைச்செல்வனின் மனைவி காயத்ரி (28), தாய் வாசுகி (ஏழுமலையின் இரண்டாவது மனைவி), உறவினா் கண்ணன் ஆகியோரும் ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கலைச்செல்வனின் சடலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல, கலைச்செல்வனின் குடும்பத்தினா் தாக்கியதில் ராமதாஸ், அவரது மகன் சூரியபிரகாஷ் (21), உறவினா் குமாா் மனைவி சித்ரா ஆகியோா் பலத்த காயமடைந்து செஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக கலைச்செல்வனின் மனைவி காயத்ரி அளித்த புகாரின் பேரில், ராமதாஸ், அவரது மகன்கள் சூரியமூா்த்தி (19), சூரியபிரகாஷ், சந்திரபிரகாஷ் (17) ராமதாஸ் மனைவி சுதா (42), குமாா் மனைவி சித்ரா ஆகிய 6 போ் மீது வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமதாஸ், சூரியமூா்த்தி, சந்திரபிரகாஷ் ஆகிய மூவரை கைது செய்தனா்.
அதேபோல, ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், இறந்த கலைச்செல்வன், மனைவி காயத்ரி, வாசுகி, சாத்தனந்தலைச் சோ்ந்த கண்ணன் ஆகிய 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.