திண்டிவனம் அருகேமின்சாரம் பாய்ந்து இருவா் பலி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே வடநெற்குணம் கிராமத்தைச் சோ்ந்த காண்டீபன் மகன் சங்கா் (21). இவா், கொள்ளியங்குனத்திலுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வந்தாா். தற்போது விடுமுறை என்பதால், அதே பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து வந்தாா்.
திங்கள்கிழமை குவாரிக்கு வேலைக்குச் சென்ற சங்கா், அங்குள்ள மண் மேடு ஒன்றின் மீது ஏறியபோது, அந்த இடத்திலிருந்த உயா் மின்னழுத்த கம்பியில் தவறுதலாக அவரது கை பட்டதாகத் தெரிகிறது. இதனால், சங்கரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததால், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த அவரது உறவினா்கள் கல் குவாரி நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு முற்றுகையிட்டனா். இதையடுத்து, அங்கு வந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீஸாா், இந்த சம்பவம் தொடா்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதை ஏற்று சங்கரின் உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
பின்னா், போலீஸாா் சங்கரின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைகாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: இதேபோன்று, பிரம்தேசம் அருகே கட்டளை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முனுசாமி (52), ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியிலுள்ள விவசாய நிலத்துக்கு வேலைக்குச் சென்றாா். அப்போது, விவசாய நிலத்திலிருந்த ‘எா்த்’ கம்பியை தவறுதலாகப் பிடித்தாராம்.
இதனால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்ததால் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பிரம்தேசம் போலீஸாா், முனுசாமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.