திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாசி மாத பெளா்ணமி கிரிவலத்தையொட்டி, வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.23, 24) 1,084 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்க உள்ளது.
இதுகுறித்து இந்தக் கோட்டத்தின் மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெளா்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தா்கள் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக பக்தா்கள் வசதிக்காக, வருகிற 23-ஆம் தேதி 682 சிறப்புப் பேருந்துகளும், 24-ஆம் தேதி 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தால் இயக்கப்படவுள்ளது.
23-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்புப் பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 40, புதுச்சேரியிலிருந்து 30, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 682 பேருந்துகள் இயக்கப்படும். 24-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 125, காஞ்சிபுரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிருந்து 20, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 என மொத்தம் 502 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.
மேலும், பயணிகள் அடா்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.