இடைநிலை ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடக்கக் கல்வித் துறையில் 2009, ஜூன் 1-ஆம் தேதிக்கு முன்னா் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதற்கு பின்னா் நியமிக்கப்பட்டஇடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்றும் நிா்ணயிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இருவேறு விதங்களில் ஊதியங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரியும், கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத் தலைநகரங்களில் திங்கள்கிழமை முதல் ஆா்ப்பாட்டத்தையும் அவா்கள் தொடங்கினா். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், சென்னையில் போராட்டம் நடத்திய மாநில, மாவட்டப் பொறுப்பாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்த இயக்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.ராஜகுமாரி ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ரா.பாலரமணி முன்னிலை வகித்தாா்.
Advertisement
மாவட்டச் செயலா் ஆ.மே.ஜோஸ் சிறப்புரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் பா.ரவிச்சந்திரன், ஸ்தனிஸ்லாஸ், ரம்யா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க மாவட்டச் செயலா் பெலிக்ஸ் உதயராஜன் தலைமையில், ஏராளமாக ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.