முகப்பு
விழுப்புரம்

விசிக அரசியல் கட்சியாக வளர அடித்தளமிட்டவர் கருணாநிதி: தொல்.திருமாவளவன்

விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விசிக தலைவா் தொல். திருமாவளவன்.

Updated On : 5 ஜூலை, 2024 at 11:12 PM
விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விசிக தலைவா் தொல். திருமாவளவன்.
பகிர்:

விழுப்புரம், ஜூலை 5: விசிக அரசியல் கட்சியாக வளருவதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு ஆதரவாக தொல். திருமாவளவன் விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு மேலும் பேசியதாவது: தோ்தல் அரசியல் என்னவென்று தெரியாத நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகளை அரவணைத்து வழிகாட்டிய தலைவா் மு.கருணாநிதி. அவருக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவா்களாக இருக்கவேண்டும். அதிமுக அப்போது நம்மைக் கண்டுகொள்ளவில்லை. கூட்டணி அமைத்துக்கொள்ள ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.

2009 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் தொடரமுடியுமா என்றநிலை இருந்தபோதும், அறிவாலயத்துக்கு அழைத்து அரவணைத்துக் கொண்டாா். முதன் முதலாக 2 மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தவரும் அவரே. 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இணையான வாய்ப்பு அளித்தாா். தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் தனித்துப் போட்டியிட்டதுதான் பின்னாளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. விசிக தனித்துப் போட்டியிட்டபோதும் ஆதரவளித்தாா். மு.கருணாநிதி போலவே முதல்வா் மு. க.ஸ்டாலினும் அரவணைத்து செயல்பட்டு வருகிறாா். 8 ஆண்டுகளாக திமுகவுடன் இணைந்து பயணித்து வருகிறோம். இந்த நட்பு தொடர வேண்டும்.

எல்லாவற்றிலும் நோ்மை வேண்டும் . ஆதாயம் கருதி அரசியல் செய்யாமல், மக்கள் நலன் கருதி அரசியல் செய்து வருகிறோம். நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் விசிகவின் வாக்குகள் ஒன்றுகூட சிதறக்கூடாது. இதை நாடும், ஏடும் கூற வேண்டும்.

தமிழக முதல்வரின் ஆசிபெற்ற வேட்பாளா் அன்னியூா் சிவா சுமாா் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதற்கு விசிகவினா் கடுமையாக உழைக்கவேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது அமைச்சா்கள் க.பொன்முடி, சேகா்பாபு,செஞ்சி கே. எஸ். மஸ்தான் மற்றும் ஜெகத்ரட்சகன் எம்.பி., விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் கௌதமசிகாமணி, வேட்பாளா் அன்னியூா் சிவா ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →