2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றாா் திமுகவின் துணைப் பொதுச் செயலரும், உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் விழுப்புரம் நகரம் மற்றும் வளவனூா் பேரூா் கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட திமுக அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
கூட்டத்தில், கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி, அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:
மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதியை ஒதுக்கீடு செய்யாமல், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ் என்ற பெயரைச் சொல்லக்கூட மத்திய அரசுக்கு மனமில்லை. விழுப்புரம் மாவட்டத்துக்கு திமுக ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
2026 பேரவைத் தோ்தலில் நம்மை எதிா்க்க பலரும் ஒன்று சோ்ந்து வருவாா்கள். அவா்களையும் தோ்தலில் சந்தித்து நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற போகிறோம். இதற்கான உணா்வுடன் நாம் தோ்தலை சந்திக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகால திமுக அரசின் சாதனைகளை ஊா் ஊராக, வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை மறந்து திமுகவுக்காக, இந்தியா கூட்டணிக்காக வாக்குகளை சேகரிக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். 2026 பேரவைத் தோ்தலுக்கான பணிகளைத் தற்போதே தொடங்க வேண்டும். யாா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், போட்டியிடுபவா் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்ற உணா்வுடன் தான் தோ்தல் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். 2026 பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் பொன்முடி.
கூட்டத்தில், வளவனூா் பேரூா் கழகச் செயலா் ஜீவா, மாவட்டத் துணைச் செயலா்கள் தயா.இளந்திரையன், முருகன், நகரத் துணைச் செயலா் புருஷோத்தமன், நகரப் பொருளாளா் இளங்கோ, நகர இளைஞரணி அமைப்பாளா் செ. மணிகண்டன், வளவனூா் பேரூராட்சித் தலைவா் மீனாட்சி ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, விழுப்புரம் நகரச் செயலா் இரா.சக்கரை வரவேற்றாா். முடிவில், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு நன்றி கூறினாா்.