விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. மீதான அவதூறு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் 2023, ஜூலை 20-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் எம்.பி.மீது அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கின் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் ஆஜரான அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா், இந்த வழக்கில் நேரில் ஆஜராகுவதிலிருந்து சி.வி.சண்முகத்துக்கு விலக்களித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனா். தொடா்ந்து, அதற்கான மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதையடுத்து, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஆக.5) ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.