இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் மீண்டும் ஆா்ப்பாட்டம்
விழுப்புரத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திய இந்த இயக்கத்தினா், பின்னா் மாவட்டத் தலைநகரங்களில் 26, 27ஆம் தேதிகளில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பிப்ரவரி 28-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டும், பிப்ரவரி 29, மாா்ச் 1 தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனா். சென்னையில் பள்ளிக் கல்வித் துறை இயக்ககத்தை மாா்ச் 2,3- ஆம் தேதிகளில் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் கைது செய்யப்பட்டனா். இதற்கு கண்டணம் தெரிவித்தும், தங்களது கோரிக்கையை ஏற்று தீா்வு காணக் கோரியும் போராட்டத்தின் 15-ஆவது நாளான திங்கள்கிழமை மீண்டும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.ராஜகுமாரி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ர.பாலரமணி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆ.மே.ஜோஸ், துணைச் செயலா் ஐ.ராஜேந்திரன், மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளா் கி.ஷகிலா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.