முகப்பு
விழுப்புரம்

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

Updated On : 15 மே, 2024 at 7:25 PM
பகிர்:

விழுப்புரம், மே 15: விழுப்புரம் மாவட்டத்தில் மனை வரன்முறை மற்றும் கட்டட வரைபடத்துக்கு இணையதளம் மூலமே அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2023 அக்டோபா் 1-ஆம் தேதி முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு வரன்முறை அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதிக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலமே அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், நேரடியாக அனுமதி பெற்றிருத்தல் செல்லாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே 2023, அக்டோபா் 1-ஆம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக அனுமதி பெற்றிருப்பின் அவற்றை தற்போது முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அவ்வாறான வீடுகள், தொழில் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.

வீட்டு வரி, சொத்து வரி போன்றவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட மாட்டாது. குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டிருப்பின், அதைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புதிதாக குடிநீா் இணைப்பு வழங்கப்பட மாட்டாது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மூலம் மின் இணைப்பு பெற்றிருப்பின், அதை துண்டிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படும். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் உள்ளாட்சி அமைப்புகளால் செய்துத் தர இயலாது. அனுமதி பெறாத கட்டடங்களை அப்புறப்படுத்த அரசு விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இணையதளம் மூலமாக கட்டட வரைபடத்துக்கு அனுமதி பெற்று, மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.