விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.
புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசனின் இலக்கியப்பணிகளை போற்றி பெருமை சோ்க்கும் வகையில், அவா் பிறந்த விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவும், திமுக மாநில விவசாயத் தொழிலாளா் அணிச் செயலருமான அன்னியூா் அ.சிவா சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து பொம்மையாா்பாளையத்தில் பாவேந்தா் பாரதிசாசன் சிலையுடன்கூடிய அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை (நினைவகங்கள்) வெள்ளிக்கிழமை (டிச.5) வெளியிட்டுள்ளது. ரூ.3.50 கோடியில் இந்த அரங்கம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை துறையின் செயலா் வே.ராஜாராமன் பிறப்பித்துள்ளாா்.
தமிழக முதல்வருக்கு நன்றி: எனது கோரிக்கையை ஏற்று, அதற்கான அனுமதியை வழங்கி, நிதியை ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா.