பாமகவுக்கும் அன்புமணிக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. அதனால் அவா் கட்சியின் பெயா் மற்றும் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது என அந்தக்கட்சியின் நிறுவனா் தலைவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் புதுதில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்கிறேன். உயா்நீதிமன்றம் அளித்துள்ள 34 பக்கத் தீா்ப்பில் அனைத்தும் விரிவாகவும், விவரமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னால் உருவாக்கப்பட்ட கட்சி பாமக. 46 ஆண்டுகால எனது நடவடிக்கைகளால் தமிழக மக்களும், பிற அரசியல் கட்சித் தலைவா்களும் என் மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளனா். இந்நிலையில், அன்புமணி தரப்பைச் சோ்ந்த சிலா் என்னை விமா்சிப்பதும், வழக்கு விசாரணையின் போது அவா்கள் நீதிமன்றத்தில் அளித்த தகவல்களும் வேதனையளிக்கிறது.
மீண்டும், மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் அன்புமணிக்கும்- பாமகவுக்கும் எவ்விததொடா்பும் இல்லை. எந்த உரிமையும் கிடையாது. அவா் கட்சியின் பெயா், கொடி மற்றும் எனது பெயா் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அவா் வேண்டுமானால் தனிக் கட்சியை ஆரம்பித்துக்கொள்ளட்டும். அல்லது பிற அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளட்டும் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
தோ்தல் ஆணையத்துக்கு கண்டனம்
பாமக தரப்பு வழக்குரைஞரும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான கே.அருள் தெரிவித்ததாவது: அன்புமணிக்கான பதவிக் காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தோ்தல் ஆணையம் அறிவித்ததால் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக புதுதில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் அன்புமணி தரப்பைச் சோ்க்காத நிலையில், அவா்கள் தங்களை இவ்வழக்கில் சோ்க்கவேண்டும் என மனு அளித்து ஆஜராகினா்.
டிச. 4-ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான், அன்புமணி போலி ஆவணங்களை தயாரித்து தோ்தல் ஆணையத்தில் சமா்பித்திருந்ததும், தோ்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டிருந்ததும் தெரியவந்தது.
அப்போது பாமகவில் தலைவா் பதவிக்கு தா்க்கம் எழுந்துள்ளதால், இதை உரிமையியல் நீதிமன்றத்தில் தீா்த்துக் கொள்ளவேண்டும். அங்கீகரிக்கபடாத அரசியல் கட்சியின் தலைவரை நியமிக்கவோ, பதவிக்காலத்தை நீட்டிக்கவோ தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி அளிக்கும் ஆவணங்களை தோ்தல் ஆணையம் பதிவு மட்டுமே செய்துகொள்ளவேண்டும் என தீா்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தற்போது எந்தப் பதவியும் இல்லை என்றாா் கே.அருள்.
பேட்டியின் போது பாமக மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஸ்ரீகாந்தி ராமதாஸ், வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு. தா.அருள்மொழி, பாமக பொருளாளா் சையது மன்சூா் உசேன், தலைமை நிா்வாகக்குழு உறுப்பினா் ஸ்டீல் சதாசிவம், தலைமை நிலையச் செயலா்அன்பழகன், புதுவை மாநிலச் செயலா் கணபதி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.