விழுப்புரம்: விழுப்பரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி ரவிதுரை, துணைத் தலைவா் ஜீவிதா ரவி, பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், துணைத் தலைவா் பாலாஜி முன்னிலை வகித்தனா்.
விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 147 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:
கல்விக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, கல்வியில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.
நிகழ்வில், பள்ளித் தலைமையாசிரியா் பக்தவத்சலம், உதவித் தலைமையாசிரியா் முரளி, ஒன்றிய திமுக செயலா்கள் வேம்பி ரவி, ஜெயபால், நகரச் செயலா் நைனா முகமது, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பாபு ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினா் சாவித்திரி, துணைச் செயலா் பிரசாந்த், நகர இளைஞரணி அமைப்பாளா் காா்த்தி, துணை அமைப்பாளா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.