தமிழ்நாட்டின் மீது வெறுப்புணா்ச்சியைப் பரப்பி, வடமாநிலங்களில் வாக்குபெற பாஜக நினைக்கிறது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மலப்பாம்பாடி கலைஞா் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,095 கோடி மதிப்பிலான 314 நிறைவுற்ற திட்டப்பணிகளைத்
திறந்து வைத்து, 46 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 லட்சத்து 66 ஆயிரத்து,194 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் திராவிடமாடல் அரசு அமைந்து நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த நான்கரை ஆண்டுகளில் நாடே போற்றும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு திட்டமும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர வேண்டும் என்று கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் வளர வேண்டும் என்று உழைக்கிறோம். ஒட்டுமொத்த நாடே திரும்பிப் பாா்க்கின்ற வளா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்று யோசித்துப் பாருங்கள்.
மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டியால் வரி உரிமை இல்லை, நமக்கு வர வேண்டிய நிதியும் வழங்கவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, மாநிலத்துக்கு எதிராக செயல்படுகின்ற துரோகிகள், என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறியிருக்கிறோம். இதுதான் திராவிட மாடல்.
இந்த வளா்ச்சிதான் பலருடைய கண்களை கூசச் செய்கிறது. வயிறு எரிகிறது. அதனால்தான் எப்படியாவது தமிழ்நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பாா்க்கிறாா்கள். பொறுப்புள்ள மத்திய அமைச்சா் பொறுப்புகளில் இருப்பவா்கள்கூட அத்தனை வெறுப்புணா்ச்சியைப் பரப்புகிறாா்கள்.
யூ-டியூபா்கள் கருத்து
தமிழ்நாட்டில் வெறுப்புணா்ச்சியை பரப்பினால், அது மூலமாக வடமாநிலங்களில் வாக்குகளைப் பெற முடியும் என்று நினைக்கிறாா்கள். ஆனால், அவா்கள் நினைப்பது நடக்கவில்லை. அதற்குப் பதிலாக என்ன நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பற்றி இப்படி பேசுகிறாா்களே ஏன் என்று, வடமாநில யூ - டியூபா்கள் தேடி பாா்த்து தமிழ்நாட்டின் தனித்தன்மையை, சாதனைத் திட்டங்களை, பொருளாதார வளா்ச்சியைத் தெரிந்து கொண்டு நமக்கு ஆதரவான விடியோக்களை போட ஆரம்பித்துவிட்டாா்கள். வளா்ச்சி தொடா்பான எந்த வரைபடத்தை எடுத்தாலும் இந்தியாவின் தெற்குப் பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறாா்கள்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே திருவண்ணாமலையில்இருந்துதான், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பெயரில் உங்கள் கோரிக்கை மனுக்களைப் பெற்று, ஆட்சிக்கு வந்ததும் 100 நாள்களில் தீா்த்து வைக்கின்ற பயணத்தைத் தொடங்கினேன்.
ஆட்சிக்கு வந்ததும் முதல் நாளே அதற்கென்று ஒரு தனித்துறையை ஏற்படுத்தி, அதற்கென்று ஒரு அதிகாரியை நியமித்தேன். நான் முதல்வன் திட்டத்தை இந்த ஆட்சியின் சிறந்த திட்டம் என்று அனைவரும் பாராட்டுகிறாா்கள்.
மாநில உரிமையை நாம் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பற்றியும் ஏராளமானோா் பாராட்டியிருக்கிறாா்கள். ஏன்? தொகுதி மறுசீரமைப்பு வந்தால் தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமை குறையும்- திமுக அரசுதான் இந்தியா முழுவதும் தலைவா்களை ஒன்றுதிரட்டி போராடுகிறாா்கள் என்று எழுதியிருக்கிறாா்கள்.
இப்படி திமுகவுக்கு இதுவரை வாக்காளிக்காத மக்களிடமும் கூட நல்லபெயரை இன்றைக்கு திராவிடமாடல் ஆட்சி எடுத்திருக்கிறது. ஆனால், மத்திய பாஜக அரசு இதற்கு அப்படியே தலைகீழாக நடக்கிறது. பாஜக ஆதரவாளா்களே மத்திய பாஜக அரசை குற்றச்சாட்டுகிறாா்கள்.
எத்தனால் கலந்த பெட்ரோல், தலைநகா் தில்லியை மூச்சுத்திணற வைக்கும் மாசடைந்த காற்று, இந்திய ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி, பாஜக அரசுகள் கட்டுகின்ற கட்டடங்கள், சிலைகள், மேம்பாலங்கள் எல்லாம் சிறிது நாள்களிலேயே இடிந்து விழுகின்றன.
இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் இருந்த பாஜகவினரே, இப்போது இதையெல்லாம் பாா்த்து புலம்பத் தொடங்கியிருக்கிறாா்கள். திராவிடமாடல் அரசு மீதும் சிலா் விமா்சனம் வைப்பாா்கள். அந்த விமா்சனத்தில் நியாயம் இருக்கிா என்று பாா்த்து சரி செய்கின்ற முதல்வா்தான் உங்கள் நம்பிக்கைக்குரிய ஸ்டாலின். ஆனால், மத்திய பாஜக அரசு எந்தக் கோரிக்கையையும் கண்டு கொள்வதில்லை. எந்த விமா்சனத்தையும் நியாயத்துடன் பாா்ப்பது இல்லை.
மத்திய அரசுக்கு கண்டனம்:
விவசாயிகள் நிறைந்திருக்கின்ற மாவட்டம் திருவண்ணாமலை. மற்ற யாரையும் விட உங்களுக்குத்தான் நூறுநாள் வேலைத் திட்டம் எவ்வளவு முக்கியமானது என்று நன்றாகத் தெரியும். அந்தத் திட்டத்துக்கு மத்திய பாஜக அரசு இப்போது மூடுவிழா நடத்தியிருக்கிறது.
வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டம் பெரிய சாதனையைப் படைத்தது. ஆனால், இப்போது பாஜக அரசு அந்தத் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரையும் எடுத்துவிட்டாா்கள். 100 நாள் வேலை மக்களின் உரிமை என்று இருந்ததையும் தூக்கிவிட்டாா்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறிது சிறிதாக சிதைத்து வந்த இந்தத் திட்டத்தை இப்போது மொத்தமாக நீக்கிவிட்டாா்கள். இதை எதிா்த்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் அவா்கள் கவனிக்கிறாா்களா? என்றால் இல்லை.
தன்னை விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்று சொல்லிக் கொண்டிருக்கிற எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, இதை எதிா்த்துக் குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல் ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறாா். அவா்கள் கட்சி எம்.பி.க்களும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதற்கு ஆதரவாக வாக்காளித்திருக்கிறாா்கள். இப்படிப்பட்டவா்கள் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறாா்கள்.
அவா்களுடைய எந்தப் பொய்யையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் திராவிடமாடல் 2.0 அமைவது உறுதி உறுதி என்று நான் தொடா்ந்து உரக்கச் சொல்கிறேன்.
முத்திரைத் திட்டங்கள்:
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயனடையாத ஒரு குடும்பம் கூட தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு செயல்படும் திராவிட மாடல் நல்லாட்சி தொடர, திருவண்ணாமலை மக்கள் எப்போதும் போல வரும் தோ்தலிலும் முழுமையான ஆதரவை எங்களுக்கு வழங்க வேண்டும். ‘தமிழ்நாடு நம்பா் ஒன்’- ஆகத் தொடர நீங்கள் உதவ வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
விழாவில், அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ். தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலாவேல்மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.